×

தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.5: அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு விசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறுப்படுகை மற்றும் கிணற்று பாசனம் மூலம் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் 40 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இம்மரங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 கோடி தேங்காய்கள் கிடைக்கிறது. இந்த தென்னை மரங்களை நம்பி தேங்காய் மண்டிகளும், துடைப்பம், நார் தயாரிக்கும் சிறுதொழில்களும், கொப்பரை பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

குறிப்பாக அரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தென்னங்கன்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டியை சேர்ந்த தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி தலைமையில் விவசாயிகள் நேற்று பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, தென்னங்கன்று வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் கென்னடி மற்றும் விவசாயிகள் கூறியதாவது: இந்தியாவிலேயே மிகவும் பழமையான ரகத்தை கொண்டது அரசம்பட்டி தென்னையாகும். கடந்த 65 ஆண்டுகளில் 11 மாநிலங்களில் அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்பட்ட தென்னங்கன்றுகளைதான் விவசாயிகள் நடவு செய்துள்ளனர். இதற்காக வெளிமாநிலத்தில் இருந்து விவசாயிகள் நேரடியாக அரசம்பட்டிக்கு வருகின்றனர். இதற்கு காரணம், இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னை, எந்த தட்பவெப்ப நிலையிலும் நன்கு வளரக்கூடியது. அங்குள்ள மண்ணின் வளத்திற்கு ஏற்ப காய்க்கும் திறன் இருக்கும். மேலும், இங்குள்ள மண்ணின் தரம், விதைகளின் திறன், தேங்காய்களில் உள்ள எண்ணெய் சத்துக்கள் நிறைந்துள்ளதால், தனித்தன்மை கொண்டதாகும். பல்வேறு இடங்களில் விளைவிக்கப்படும் தேங்காய்கள் அதிகப்பட்சம் 60 நாட்கள் வரை தான் தாக்குபிடிக்கும். ஆனால் அரசம்பட்டியில் விளைவிக்கப்படும் தேங்காய், 120 நாட்கள் வரையிலும் தாக்குபிடித்து, பின்னர் கொப்பரையாக அல்லது விதைக்காய்களாக மாறும் தன்மை கொண்டது.

மேலும், குஜராத், புதுடில்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் அரசம்பட்டி தேங்காய்களை அதிகளவில் உணவிற்காகவும், பிற தேவைகளுக்காக, இங்கிருந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது அரசு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்துள்ளதால், அரசம்பட்டி தென்னைக்கு மேலும் வரவேற்பு அதிகரிக்கும். அதே வேளையில், இங்கு தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.போச்சம்பள்ளி சிப்காட்டில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை தொடங்கிட, அரசு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1 லட்சம் தென்னை விவசாயிகளின் பங்களிப்புடன், தொழிற்சாலை தொடங்கப்படும். அதில், தேங்காய் எண்ணெய், இளநீர் பவுடர், தேங்காய் பால் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். சுமார் 5 லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பெருகும். இதற்கான சாத்தியக்கூறுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை வேண்டும். இதேபோல் தென்னையில் பூச்சி, நோய்கள் தாக்குதல் காரணமாக அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, அரசம்பட்டியில் தென்னை ஆராய்ச்சி மையமும் தொடங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Visayas ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்