×

விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

ஏற்காடு: வாரவிடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் ஒகேனக்கல் அருவியில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி சென்றும் மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் தமிழகம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ஏற்காட்டுக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ேராஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஓட்டல் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே ஏற்காட்டில் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை கனமழை பெய்தது. இதனால் கடும் குளிர் ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இன்று காலை குளிர் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த இதமான சீதோஷண நிலை சுற்றுலாப்பயணிகளுக்கு உற்சாகம் அளித்தது. இதேபோல் மேட்டூர் அணை பூங்காவிலும் சுற்றுலாப்பயணிகள் இன்று அதிகமாக வந்திருந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்ததுடன், அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு சமைத்து உண்டனர். மேலும் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி சென்று காவிரியின் அழகை ரசித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகையால் மீன் உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

Tags : Okanakal, Uttar ,Yardadu ,Okanakall ,Okanakal River ,Salem district ,Feeder of the Poor ,Tamil Nadu ,Karnataka ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...