×

பதிவு செய்யும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில்கள் விருப்ப கட்டணம் வசூலிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வழக்கறிஞர்களாக சட்ட பட்டதாரிகளை பதிவு செய்யும் மாநில கவுன்சில்கள், விருப்ப கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா மாநில பார் கவுன்சில் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கிரண்பாபு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய பார் கவுன்சில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அனைத்து மாநில பார் கவுன்சில்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதாகவும், கர்நாடகா பார் கவுன்சிலில் அடையாள அட்டை, சான்றிதழ், நல நிதி உள்ளிட்டவைகளுக்காக விருப்பத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதால் சட்டப்பூர்வ கட்டணத்தை விட அதிகமாக ரூ.25,000க்கு மேல் வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘விருப்ப கட்டணம் என்று எதுவும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். எந்த மாநில பார் கவுன்சில்களும், இந்திய பார் கவுன்சிலும் விருப்பத்தின் அடிப்படையில் எந்த தொகையையும் வசூலிக்க கூடாது. சட்டப்பூர்வ கட்டணத்தை மட்டுமே அவர்கள் வசூலிக்க வேண்டும்.

கர்நாடக மாநில பார் கவுன்சில் ஏதேனும் தொகையை வசூலித்தால் அதை நிறுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார். கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டத் தொழிலில் நலிந்த மற்றும் பின்தங்கிய சமூகத்தினரின் பங்களிப்பை குறைக்கும் என உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் கூறியிருந்தது.

Tags : Supreme Court ,New Delhi ,Kiran Babu ,Karnataka State Bar Council ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...