திருவாடானை, ஆக.9: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், திருவாடானை நெடுஞ்சாலைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவாடானை-திருவெற்றியூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. மழைநீர் தடையின்றி செல்ல ஏதுவாக, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளின் கீழ் தேங்கியிருந்த குப்பைகள், மண் மற்றும் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். இப்பணிகளை கோட்டப் பொறியாளர் முருகன், உதவி கோட்டப் பொறியாளர் கீதா, மற்றும் இளநிலை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பாலங்கள் மற்றும் சாலைகளின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படவும் இந்தச் சுத்தம் செய்யும் பணி மிகவும் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
