×

சாட்சிகளை கலைக்க வாய்ப்பு தேவநாதனுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் எதிர்ப்பு: 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: நிதி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றத்தில் போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதன் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 3வது முறையாக தேவநாதன் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேவநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘தேவநாதன் யாதவ் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்தால்தான் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும்,’என்று வாதிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது,’என்றார். வாதங்களைகேட்ட நீதிபதி,‘நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துகளை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவநாதனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Devanathan ,Chennai ,Mylapore ,Permanent Fund ,Mylapore, Chennai ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...