×

தி.நகர், ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் இடங்களில் ரூ.7.5 கோடியில் புதுப்பிக்கும் பணி: மாநகராட்சி திட்டம்

சென்னை, ஆக.7: சென்னையில் இரண்டு முக்கிய மேம்பாலங்களின் கீழுள்ள இடங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் இடங்களில் மொத்தம் ரூ.7.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த திட்டம், பயன்படுத்தப்படாத நகர இடங்களை மேம்படுத்தி, மக்களுக்கும் பயணிகளுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தி.நகரில் என்ன மாற்றங்கள்? தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை மகாலிங்கபுரம் சாலை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் இடம் ரூ.3.75 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து இரு சக்கர வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் வசதி. இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பார்க்கிங் இடம்.

உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்க 5 சிறு கடைகள். 8 கழிப்பறைகள் (3 ஆண்களுக்கு, 3 பெண்களுக்கு, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு). ஆர்ஓ குடிநீர் வசதி, மரங்கள், செடிகள், அலங்கார விளக்குகள், பயணிகளுக்கு உட்காரும் இடம். சிசிடிவி கேமராக்கள், திசை காட்டும் பலகைகள். பார்வையற்றவர்களுக்கு உதவும் தொடு பாதை, மழைநீர் வடிகால் மற்றும் பராமரிப்புக்கு ஏற்ற தரைத்தளம் போன்றவை அமைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் கீழ் உள்ள யூடர்ன், ஆட்டோ நிறுத்தம், ஆம்புலன்ஸ் பார்க்கிங் ஆகியவை பாதிக்கப்படாமல் தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்வார்பேட்டையில் என்ன திட்டம்?
ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலை சி.பி. ராமசாமி சாலை மேம்பாலத்தின் கீழ் இடமும் ரூ.3.75 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இங்கு மின்சார வாகன சார்ஜிங் மையம் இல்லை என்றாலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பார்க்கிங். வணிகக் கடைகள், மரங்கள், அலங்கார விளக்குகள், உட்காரும் இடங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் மேம்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது.
இரு திட்டங்களுக்கும் தனித்தனியாக டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. டெண்டர் முடிவடைந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கும். இந்தத் திட்டங்கள் மூலம் சென்னையில் மக்களுக்கும் பயனுள்ள, பாதுகாப்பான, பசுமையான இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

Tags : Nagar, Alvarpet ,CHENNAI ,Nagar ,Alvarpet ,North Usman Road Mahalingapuram Road Junction ,Mahalingapuram Road Junction ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...