×

டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் ஆர்டர் இல்லை அமெரிக்காவுக்கு 67 லட்சம் முட்டை ஏற்றுமதி நிறுத்தம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தை உள்ளடக்கிய நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் முழுமைக்கும் தினமும் லாரிகளில் நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதைத் தவிர ஓமன், கத்தார், துபாய், பக்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சராசரியாக தினமும் 30 முதல் 40 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 67 லட்சம் நாமக்கல் முட்டைகள் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து ஏற்றுமதி வாய்ப்பு, அமெரிக்காவில் இருந்து கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல், இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, அமெரிக்க அரசு 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. 25 சதவீத வரி விதிப்பால், இந்திய முட்டைகளை வாங்க அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் எதாவது ஒரு பிரச்னை காரணமாக முட்டை ஏற்றுமதி குறைந்து வருவதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Trump ,US ,Namakkal ,Salem ,Dharmapuri ,Erode ,Karur ,Tamil Nadu ,Kerala ,Oman ,Qatar ,Dubai ,Bahrain ,Maldives ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...