சென்னை: விதிகளை முறையாக பின்பற்றாத மற்றும் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி பட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டை பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்-2022 யுஜிசியால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர்க்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் பல்வேறு உயர்க்கல்வி நிறுவனங்கள் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன.
அந்த நிறுவனங்கள், கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிடம் இருந்து பட்டங்கள் பெறுவதை எளிதாக்கி வருவதும் யுஜிசி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி சில தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சில வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இணையவழியில் பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை வழங்குவது தொடர்பாக செய்தித்தாள்கள், சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு எந்த அனுமதியும் யுஜிசியால் வழங்கப்படவில்லை. எனவே, அத்தகைய பட்டங்களும் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாது. இதுதவிர இத்தகைய செயல்களில் ஈடுபடும் உயர்க்கல்வி நிறுவனங்கள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் மாணவர்கள், பொது மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
