குருகிராம்: குருகிராமில் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குருகிராமின் பாலியாவாஸ் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (42) என்பவருக்கும், டெல்லியின் அசோக் விகார் பகுதியைச் சேர்ந்த யஷ்மீத் கவுர் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக டி.எல்.எஃப் பேஸ்-3 பகுதியில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். திருமணமான ஹரிஷுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினரை அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார். அவ்வாறு சந்திக்கச் செல்லும் போதெல்லாம், யஷ்மீத் கவுருடன் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிஷ், தனது உறவினர் பரத்திடமிருந்து 7 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, விஜய் என்ற மற்றொரு நபருடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர் அவர் யஷ்மீத் கவுரின் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி, குழந்தைகளைப் பார்க்கப் போன ஆத்திரத்தில் இருந்த யஷ்மீத் கவுர், கள்ளக்காதலன் ஹரிஷுடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த யஷ்மீத் கவுர், கத்தியால் ஹரிஷைக் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறுநாள் காலை, யஷ்மீத் கவுரே, ஹரிஷின் உறவினரை போனில் அழைத்து மரணச் செய்தியைத் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், யஷ்மீத் கவுரைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய விஜய் என்பவரிடமும், ஹரிஷ் எதற்காக 7 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றார்? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
