×

மனித எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ரூ.28 கோடி புதிய வகை போதைப்பொருள் கடத்தல்: கொழும்பு ஏர்போர்ட்டில் இங்கிலாந்து பெண் கைது


கொழும்பு: மனித எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து பெண்ணை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்லட் மே லீ (21) என்ற இளம்பெண், இந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை தலைநகர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். அவரை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவரிடம் 46 கிலோ ‘குஷ்’ என்ற செயற்கை போதைப்பொருள் இருந்தது. இந்தப் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 28 கோடி ரூபாய் (3.3 மில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிலைய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சார்லட், தனது பயணப் பைகளில் இந்தப் போதைப்பொருள் தனக்குத் தெரியாமல் வைக்கப்பட்டதாகக் கூறி, அவர் மீதான குறற்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட சார்லட் மே லீ, முன்னாள் விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் இருந்தவர் ஆவார். தாய்லாந்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரது 30 நாள் விசா காலாவதியானதால், மூன்று மணி நேரப் பயணமாக இலங்கைக்கு வந்தார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், மேற்கு ஆப்ரிக்காவில் சியரா லியோனில், பல உயிர்களைக் காவு வாங்கும் ஆபத்தான பொருளாக உள்ளது. இந்தப் போதைப் பொருளில் மனித எலும்பு தூள் உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சியரா லியோனில் கல்லறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சார்லட் தற்போது கொழும்புக்கு வடக்கே உள்ள நெகம்போ சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கான்கிரீட் தரையில் தூங்க வேண்டிய நிலையில் உள்ளார். அவரது குடும்பத்துடன் தொடர்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது’ என்றார்.

சார்லட் மே லீயிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், மேற்கு ஆப்ரிக்காவில் சியரா லியோனில், பல உயிர்களைக் காவு வாங்கும் ஆபத்தான பொருளாக உள்ளது.

The post மனித எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ரூ.28 கோடி புதிய வகை போதைப்பொருள் கடத்தல்: கொழும்பு ஏர்போர்ட்டில் இங்கிலாந்து பெண் கைது appeared first on Dinakaran.

Tags : UK ,Colombo airport ,Colombo ,Charlotte May Lee ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...