×

நெல்லியாளம் நகராட்சி கூட்டம்: பாரபட்சமாக பணிகள் ஒதுக்கீடு; கவுன்சிலர்கள் புகார்

பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். ஆணையாளர் சுவிதாஸ்ரீ முன்னிலை வகித்தார். தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து செயல் அறிக்கை அஜெண்டா வாசிக்கப்பட்டது. விசிக கவுன்சிலர் புவனேஷ்வரன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஷீலா, புவனேஷ்வரி, வசந்தகுமாரி, ஸ்ரீகலா மற்றும் அதிமுக கவுன்சிலர் ஜாபீர், செல்வராணி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சூரியகலா, சித்ரா, விஜயா, சுயேச்சை கவுன்சிலர் ஷஷினா உள்ளிட்டோர் தலைவர் பாரபட்சமாக பணிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் சில வார்டுகளுக்கு எந்த பணிகளும் ஒதுக்கப்பட வில்லை எனவே இந்த அஜெண்டாவை நிராகரிப்பதாக கூறி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நெல்லியாளம் நகர செயலாளரும் கவுன்சிலருமான சேகர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் கவுன்சிலர்களிடம் சமாதானம் பேசி அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் பணி ஒதுக்கீடு செய்து மீண்டும் அவசர கூட்டம் நடத்தப்படும் என சமாதானம் செய்தனர்.

அத்தியாவசியம் கருதி பணிகளை செய்திட மட்டும் மன்றம் ஒப்புதல் தரவேண்டும் என அனைத்து கவுன்சிலர்களையும் அமரவைத்து ஒப்புதல் பெற்றனர். மீண்டும் நகர்மன்ற கூட்டம் நடைபெறுவதாக ஆணையாளர் சுவிதாஸ்ரீ கூறியதால் சமாதானம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post நெல்லியாளம் நகராட்சி கூட்டம்: பாரபட்சமாக பணிகள் ஒதுக்கீடு; கவுன்சிலர்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Nellialam Municipality ,Pandalur ,DMK ,Nilgiris district ,Sivagami ,Commissioner ,Suvidhasree ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்