×

பாடாய்படுத்தும் கழுத்து வலி… பாதுகாத்திடும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் மூன்று மாதமாக கழுத்து வலி இருந்ததால் என்னிடம் வந்திருந்தார். ஏற்கெனவே கழுத்து வலிக்காக ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை பயம் காரணமாக எடுத்திருந்தார். அவற்றை எல்லாம் வேறு சில மருத்துவர்களிடம் காண்பித்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறிவிட்டனர். ஆனால், கழுத்து வலி
குணமடையவில்லை.

நான் பரிசோதனை செய்ததில் அவர் அமரும் இடம் ஒரு பக்கமும், ஆசிரியர்கள் எழுதும் பலகை வேறு ஒரு பக்கமும் இருந்ததால் ஒரே பக்கம் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பார்ப்பதால் வந்த கழுத்து வலி என்பது தெரிந்தது. மேலும், தசைகள் போதுமான வலுவுடன் இல்லாமல் இருந்ததால் கழுத்து வலி குணமடையாமல் இருந்தது. எனவே, அதற்கான தீர்வுகளை அவருக்கு பரிந்துரைத்து சிகிச்சை அளித்து வருகிறேன்.

இது ஏதோ வெகு சிலரிடம் இருக்கும் பிரச்னை இல்லை. கல்லூரி செல்லும் மாணவர்கள் தொடங்கி நாற்பது வயதுள்ள பலருக்கும் கழுத்து வலி வருவதால் இவ்விஷயத்தில் போதிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதனால், கழுத்து வலி ஏன் இளம் வயதில் வருகிறது, அவ்வாறு வந்தால் எம்மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது, எப்படி அவற்றை வருமுன் தடுப்பது போன்றவற்றை சொல்லவே இந்தக் கட்டுரை.

கழுத்துப் பகுதி…

மூளையின் தொடர்ச்சியாக அமைந்ததே தண்டுவடம். இதனை பாதுகாப்பாக வைத்திருக்க தண்டுவட எலும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக தலையின் கீழிருந்து நம் இடுப்பு எலும்புக் கூடு வரை வந்து முடிவடையும். இது மட்டுமில்லாமல் தண்டுவடத்திலிருந்து நரம்பு கொத்துகள் வெளியே வந்து கைகளுக்கும், கால்களுக்கும் சமிக்கைகள் அனுப்பி நம் கைக்கால்கள் இயல்பாய் இயங்க உதவுகிறது.
இதனை அடுத்து ஒவ்வொரு தண்டுவட எலும்புகளுக்கு நடுவிலும் ஜெல்லி போன்ற தட்டுகள் இருக்கும். இந்த அமைப்பின் மேல் ஜவ்வுகள் (ligaments), தசைகள் படர்ந்திருக்கும். இதுவே முழுமையான கழுத்துப் பகுதியாகும்.

கழுத்து வலி…

மேல் சொன்ன கழுத்து உறுப்புகளில் எது பாதிப்படைந்தாலும் கழுத்து வலி தோன்றும். இதில் தசைகளினால் ஏற்படும் சாதாரண கழுத்து வலியினை ‘Mechanical Neck Pain’ என மருத்துவத்தில் அழைப்பர். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதில் சரி செய்து விடலாம். மேலும், வராமலும் தடுக்க முடியும். ஆனால், சாதாரண தசை வலியென அலட்சியமாக இருந்தால் கழுத்து மூட்டு, தண்டுவட தட்டுகள் (Disc), கைகளுக்கு செல்லும் நரம்புகள் என எல்லா உறுப்புகளும் பின் ஒவ்வொன்றாக பாதிப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகளை அறிவோம்…

* புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கு கழுத்து வலி ஏற்படுவதும், இளம் வயதிலேயே கழுத்து வலி வருவதும் ஆய்வுகளில் தெரிகிறது.

* அமர்ந்தபடி வேலை செய்யும் மக்களிடையே தான் கழுத்து வலி அதிகம் ஏற்படுகிறது என்பதால், நகரவாசிகளுக்கே இளம் வயதில் கழுத்து வலி ஏற்படுகிறது.

* உலக அளவில் 2010 ஆம் ஆண்டில் கழுத்து வலியினால் 37 சதவிகித மக்களும், 2020 ஆம் ஆண்டில் 57 சதவிகித மக்களும் அவதியுறுகிறார்கள்.

* உலகளவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குதான் அதிகம் கழுத்து வலி தோன்றுகிறது.

காரணங்கள்…

* தசைகள் தொடர்ந்து ஒரே வேலையை பல மணி நேரம் அல்லது பல நாள் செய்வதால் எளிதில் பாதிக்கப்படும்.

* ஒரு பக்க தசைகள் இறுக்கமாகவும், இன்னொரு பக்க தசைகள் பலவீனமாகவும் சமநிலை மாறுவதால் எளிதில் வலி தோன்றலாம்.

* ஒரே நிலையில் (Position) கழுத்தை வைத்திருப்பவர்களுக்கு தசைகளில் வலி தோன்றும்.

யாருக்கெல்லாம் வரலாம்..?

* இருபது வயது தாண்டியவர்கள்.

* அடிக்கடி தொலைபேசி பார்ப்பதற்காக கழுத்தை கீழே பார்த்தவாறு இருப்பவர்கள்.

* கூன் விழுந்தவாறு உடலை குறுக்கி உட்காருபவர்கள்.

* அடிக்கடி ஒருபக்கம் சாய்த்தவாறே கழுத்தினை பழக்கத்தால் வைத்திருப்பவர்கள்.

* நீண்ட நேரம் தினமும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் ஓட்டுபவர்கள்.

* கணினி, மடிக்கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்கள்.

* ஏற்கெனவே முதுகு வலி இருப்பவர்களுக்கு கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்…

சாதாரண கழுத்து வலியாக ஆரம்பத்தில் அதிக நேரம் வேலை செய்த நாட்களில் மட்டுமே தோன்ற ஆரம்பித்து, பின் அடிக்கடி தோன்ற ஆரம்பிக்கும். பின்னர் தொடர் கழுத்து வலியாக தினசரி வேலைகளை செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், இதனை சரி செய்யாமல் விட்டால் நரம்புகளை பாதிப்பதால் கைகள் குடைவது, தலை வலிப்பது, சிலருக்கு தலை சுற்றுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

எவ்வாறு கண்டறிவது…?

கழுத்து வலி வந்தவுடன் அலட்சியமாக இருக்காமல் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகுவது அவசியம். அவர் கழுத்து தசைகளை, அசைவுகளை பரிசோதனை செய்து மருத்துவம் வழங்குவார். முதற்கட்ட வலி என்பதால் எக்ஸ்-ரே, ஸ்கேன்கள் எடுக்க அவசியம் இல்லை.
தீர்வுகள்…

இயன்முறை மருத்துவம்

* முதற்கட்டமாக வலியினை குறைக்க இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மற்றும் சில நுணுக்கங்கள் (Manipulation Techniques) வழியாக வலியினை குணப்படுத்துவர்.

* பின் பலவீனமாக இருக்கும் தசைகளை பலப்படுத்தவும், இறுக்கமாக இருக்கும் தசைகளை தளர்த்தவும் உடற்பயிற்சிகள் கற்றுக்கொடுப்பர்.

* மேலும் வலி வராமல் இருக்க அடுத்தக்கட்ட உடற்பயிற்சிகளையும் பரிந்துரைத்து வழங்குவார்கள்.

* கடைசி கட்டமாக எதனால் வலி வருகிறது என்பதனை அறிந்து அதற்கு தக்க தீர்வுகளையும், மாற்றங்களையும் வழங்குவர். உதாரணமாக, மடிக்கணினி அதிகம் பயன்படுத்தும் நபருக்கு எப்படி மாற்றி பயன்படுத்துவது, கணினி முன் எப்படி, எந்த தொலைவில் அமர்வது போன்ற தீர்வுகளை அளிப்பார்கள்.

மருந்து மாத்திரைகள்

மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் அந்த நாள் மட்டுமே வலி குறையும் (அதாவது, வலியினை மறைத்துக்காட்டும்). மேலும் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் போன்ற வேறு உறுப்புகளை பாதிக்கும் என்பதால் இது எதுவும் நிரந்தர தீர்வாக இருக்காது.

வேறு மருத்துவ முறைகள்

சிலருக்கு வர்மா, அக்குபங்சர், சித்தா என குறிப்பிட்ட மருத்துவ முறைகளை முயற்சி செய்து பார்க்க ஆர்வம் இருக்கலாம். எனவே, அதனை எடுத்துக்கொண்டு வலியினை சரி செய்த பின் மீண்டும் இயன்முறை மருத்துவரிடம் முறையாக உடற்பயிற்சிகள் எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் இவ்வகையான மருத்துவத்திலும் வலி மட்டுமே தற்காலிகமாக குறையுமே தவிர, முழுப்பலன் இருக்காது.

வராமல் தடுக்க…?

* மேலே குறிப்பிட்ட பணிகளில் இருப்பவர்கள் வலி வருமுன் தங்கள் பணிக்கேற்ற உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவரிடம் முறையாக கற்றுக்கொள்ளலாம்.

* புகை பிடிப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றை குறைக்கலாம்.

* போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வுடன் இருப்பது, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை கூட கழுத்து வலியினை உண்டாக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

* தினமும் இருபது நிமிடம் வெயிலில் நிற்பது, அடிக்கடி உணவில் ராகி, நண்டு, ஆரஞ்சு போன்ற சுண்ணாம்புச் சத்து மிக்க உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
ஆகவே, அலட்சியமே ஆபத்தில் முடிய வைத்துவிடும் என்பதால், முதற்கட்ட வலியினை முதலிலேயே தீர்த்துவிட்டால் எப்போதும் வலியின்றி நாம் ஆக்கப்பூர்வமாக நம் பணிகளில் ஈடுபடலாம்.

The post பாடாய்படுத்தும் கழுத்து வலி… பாதுகாத்திடும் இயன்முறை மருத்துவம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!