×

நம்மாழ்வாரும் நாடி நாடி நரசிங்கனும்…

சென்ற இதழ் தொடர்ச்சி…

அதற்கடுத்து இசை பாடிப்பாடி… இந்த பதமானது மொழியால் சரணாகதி ஆகியிருப்பதையே காட்டுகிறது. அப்போது மனதாலும், மொழியாலும், உடலாலும் இந்த சேஷனாகிற ஜீவாத்மா சேஷியாகிய பரமாத்மாவிற்கு சரணாகதி ஆகியிருக்கிறது. அப்படி ஆனதினால் கண்ணீர் மல்கி… இது பக்தி பாவத்தினுடைய வெளிப்பாடு. எங்கும் நாடி நாடி… எங்கும் நாடி நாடி என்று சொல்வது என்பது ஞானத்தினுடைய வெளிப்பாடு.

கண்ணீர் மல்கி பக்தியினுடைய வெளிப்பாடு. எங்கும் நாடி நாடி என்பது ஞானத்தினுடைய வெளிப்பாடு. மேலும், எங்கும் நாடி நாடி என்பது பகவானுடைய சர்வ வியாபகத்தையும், இரண்டு நாடி நாடி என்று சொல்கிறார் அல்லவா அதை கவனியுங்கள். எங்கும் நாடி…. பிறகு இன்னொரு நாடி. முதல் நாடி சர்வ வியாபகத்தை குறிப்பிடுகிறார். மீண்டும் இரண்டாவது நாடி என்று சொல்கிறார் அல்லவா… இந்த இரண்டாவது நாடியைச் சொல்லும்போது சர்வ அந்தர்யாமித்துவத்தை குறிப்பிடுகிறார். அப்போது வெளியில் சர்வ வியாபகமாக எங்கும் நாடியிருக்கிறார். அதற்கடுத்து தனக்குள்ளேயே நாடி… சர்வ அந்தர்யாமித்துவத்தை நாடி… ஏனெனில், பகவானின் ஐந்து நிலைகளில் அந்தர்யாமியும் ஒரு நிலைதானே. பரம் வியூகம் விபவம் அர்ச்சாவதாரம் அந்தர்யாமி அல்லவா… அப்போது எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று சொல்லும்போது…

நரசிம்மாவதாரத்தினுடைய முக்கிய பிரபாவமே, சர்வ வியாபித்துவத்தையும் சர்வ அந்தர்யாமித்துவத்தையும் காண்பித்துக் கொடுப்பதுதான் நரசிம்மாவதாரமே. எந்தத் தூணைத் தட்டினால் வருவார் என்று கேட்கும்போது அத்தனை தூணிலும் அத்தனை ஜீவராசிகளுடைய இருதயத்திலும், அத்தனை சேதன அசேதன வஸ்துக்களிலும் நிறைந்திருந்து இரண்யன் தட்டிய தூணிலிருந்து வெளிப்பட்டார் அல்லவா? அப்போது எங்கும் நாடி நாடி என்று சொல்லும்போது ஆழ்வார் நரசிம்மாவதாரத்தின் பிரபாவத்தைத்தான் சொல்கிறார். ஏனெனில், அவன் எப்போதும் சர்வ அந்தர்யாமியாகவும் சர்வ வியாபியாகவும்தான் இருக்கிறான். ஆனால், அப்படி அவன் இருப்பதை நமக்குக் காண்பித்துக் கொடுத்ததுதான் நரசிம்மாவதாரம்.

இப்படியாக ஜீவாத்மாவின் பக்தியையும் ஞானத்தையும் சொல்லிவிட்டு, வாடி வாடும் இவ்வாள் நுதலே என்று சொல்கிறார் அல்லவா… ஏன் வாடணும்… பகவானை சரணடைந்த ஜீவாத்மாதானே. அந்த ஜீவாத்மாவிற்கு எப்படி வாட்டம் வரமுடியும். வாட்டம் என்கிற துன்பம் எப்படி வரமுடியும். இங்கு வாடி வாடும் இவ்வாழ் நுதலே… என்கிற பதம் அந்த ஜீவாத்மாவினுடைய வைராக்கியத்தை காண்பித்துக் கொடுக்கிறது.

ஆடி ஆடி… உடலால் ஜீவாத்மாவின் சரணாகதி. அகம் கரைந்து என்று சொல்லும்போது மனதால் அந்த ஜீவாத்மா சரணாகதி அடைந்திருக்கிறது. இசை பாடிப்பாடி என்று சொல்லும்போது மொழியால் அந்த ஜீவாத்மா சரணாகதி ஆகியிருக்கிறது. இப்படி மனம் மொழி மெய்களால் சரணாகதி ஆனதனால அந்த ஜீவாத்மாவிற்கு என்ன சித்திக்கிறது எனில் கண்ணீர் மல்குதல் என்கிற பக்தி சித்திக்கிறது. எங்கும் நாடி நாடி நரசிங்கா… என்பதன் மூலமாக ஞானம் சித்திக்கிறது.

வாடி வாடுதல் மூலமாக வைராக்கியம் சித்திக்கிறது. உலகியலில் துன்பங்கள் வரும்போது இன்பத்தை வேண்டி நாம் வாடியிருக்கிறோம். துன்பத்தை அனுபவித்து இன்பம் கிடைக்க வேண்டுமென்றுதானே வாடியிருக்கிறோம். ஆனால், இங்கு ஜீவாத்மா இந்த இன்ப துன்ப மயமான உலகத்திலிருந்து விடுபட்டு பகவான் கிடைக்க வேண்டுமென்று வாடியிருக்கிறது. இந்த வாடி வாடுதல் என்பது நரசிங்கனுக்காக வாடுதல்.

மனம், மெய், மொழிகளால் நரசிங்கனை சரணாகதி அடைந்து அந்த நரசிம்மனுக்காக கண்ணீர் மல்குதல் என்றபோது பக்தியாகி, அந்த நரசிம்மனை நாடி நாடி எங்கும் என்று சொல்லும்போது ஞானமயமாகி, அந்த நரசிம்மனுக்காக வாடி வாடி என்று சொல்லும்போது வைராக்கியமாகி… ஞான பக்தி வைராக்கியங்கள் சித்தித்த ஒரு ஜீவாத்மாவை தன்னுடைய மகளாகக் கொண்டு, ஆச்சார்ய ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ஆழ்வார் தாயாக இருந்து இந்தப் பாசுரத்தை நமக்கு அருளிச் செய்கிறார்.

அப்போது இந்தப் பாசுரத்தில் ஆழ்வாருடைய ஸ்தானம் என்பது தாயாருடைய ஸ்தானம். ஞானபக்தி வைராக்கிய ஸ்தானம் மகளுடைய ஸ்தானம். இந்த ஜீவாத்மா இங்கு சிஷ்ய ஸ்தானத்திலேயேயும், ஆழ்வார் ஆச்சார்ய ஸ்தானத்திலேயும் இருந்து கொண்டு இங்கு நரசிங்கம் என்கிற பரமாத்மாவை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார்.

ஸ்ரீதத்தாத்ரேய சுவாமிகள்

The post நம்மாழ்வாரும் நாடி நாடி நரசிங்கனும்… appeared first on Dinakaran.

Tags : Nahmamalwar Nadi Nadi Narasinghanum ,Godhead ,Nammanwar Nadi Nadi Narasinghan ,
× RELATED நம்மாழ்வாரும் நாடி நாடி நரசிங்கனும்…