காரைக்கால் அம்மையார் கதை – 4
இறை அம்சம் என்கிற பேரருள், தன் இருப்பை, தன் வருகையை, சூட்சுமமாய் வெளிப்படுத்திக் கொண்டு தானிருக்கிறது. குழந்தை முன் கோமாளி வேஷம் போடும் தகப்பன்போல, தன் பிரம்மாண்டத்தை மறைத்துக் கொண்டு, எளிய செயல்களில் தன்னை அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கண்ணீர் மல்க, தன் வேதனையை தீர்க்கக் கோரும் கணத்தில், கருவறைச் சிலையில் சாத்தியிருந்த பூச்சரங்கள் சரிதலும், “இந்தப் பூஜையும், படையலும், உனக்கு சந்தோசமா தாயே?” என மனதில் கேள்வியோடு வணங்கிக் கொண்டிருக்கும்போது, விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை, சம்பந்தமேயில்லாது,“எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு” என கூவிக்கொண்டே ஓடுதலும், உச்சக்கட்ட துக்கத்தில், திக்கு தெரியாது வேதனையோடு நிற்கின்ற வேளையில், யாரென்றே தெரியாதொருவர் நமக்கு வழிகாட்டுதலும், ஒருவகையில் இறை இருப்பின், இறை வருகையின் அடையாளங்களே. அதைப் புரிந்துகொள்ள, மாறா இறை சிந்தனையும், புறச் செயல் களில் குவிந்திடாத மனமும் வேண்டும். பரபரப்பான மனிதர்க்கு அது புரியாது.
ஆனால், எந்நாளும் சிவசிந்தனையும், சிவனடியார் தொண்டுமாகவும் இருந்த புனிதவதிக்கு அது மெல்லப் புரிந்தது.
வயோதிகராக இருந்தாலும், பின்புலத்தில் வெள்ளைநிற காளையோடு, உயரமாய் தூக்கி முடிச்சிட்டிருந்த சிகையும், கையில் கொப்பரையுமாய், ரிஷாபாரூடர் போல நின்றிருந்த சிவனடியாரின் ரூபம், அவளை கைகூப்ப வைத்தது. அவர் முகத்தில் கண்ட ஒளி கிறங்கடித்தது.
புனிதவதி தன் தடுமாற்றத்தை சரி செய்துகொண்டு, வந்திருந்த அடியாரை வரவேற்று, முன்வாசலில் மனையிட்டு, அதில் அவரை நிறுத்தி, அவர் பாதங்கள் கழுவி, பின் விழுந்து வணங்கி, கூடத்திற்கு அழைத்து வந்து, கோரை பாயிட்டு அதில் அமர வைத்தாள். முதலில் வந்த அடியாரின் களைப்பு தீரட்டும் என்று கடைந்த மோரை, உள்ளங்கையில் ஏந்தி பணிவுடன் தந்தாள்.
வந்திருந்த அடியார் மோரினை மறுத்து, “அம்மா, மிகுந்த பசியால் களைப்பாயிருக்கிறேன் தாயே. மோருக்குப் பதிலாக அன்னம் ஏதேனும் தருவாய் தாயே” என்று மெல்லிய குரலில் பேசினார்.
அன்னத்தைத் தவிர எந்தக் குழம்பு வகைகளும், பதார்த்தங்களும் தான் தயார் செய்யவில்லை என்பது புனிதவதிக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்வதென ஒரு கணம் யோசித்தபோது, சட்டென நேற்று உறையிட்ட தயிர் ஞாபகத்திற்கு வந்தது.
“சுவாமி, தாகம் தீர இந்த மோரை முதலில் அருந்துங்கள், இதோ, அரைநாழிகையில் அன்னத்தோடு வருகிறேன்” என்று பணிவோடு உரைத்து, வேகநடையாய் அடுக்கடிக்குள் நுழைந்தாள். விரைவாக தயிரன்னம் தயாரித்தாள். தயிரன்னத்திற்கு தொட்டுக் கொள்ள பதார்த்தமில்லையே என, கவலையுற்ற நேரத்தில், தன் கணவன் அனுப்பிருந்த மாம்பழங்களின் வாசம், நாசியைத் துளைத்தது. சந்தோசமானாள்.
ஆனால், தன்கணவன் உண்ணாது, எப்படியென யோசித்தவள், இரண்டில் தன்பங்காய் ஒன்றுண்டே, அதை எடுத்துக்கொள்வோம் என ஒன்றெடுத்து, அதை பல துண்டுகளாய் அரிந்து, வட்டிலில் வைத்தாள். கலம் நிறைய தயிரன்னமும், வட்டில் நிறைய மாம்பழத் துண்டங்களும் இரு கை களிலும் ஏந்தி வந்து, அடியார்முன் இலை பரப்பி பரிமாறினாள்.
சிவனடியார் தயிரன்னம் மெல்ல சுவைத்து உண்டார். மாம்பழத்துண்டுச்சாறு உறிஞ்சினார். கடைசிப் பருக்கை வரை ருசித்து, கடைசித் துண்டுவரை சாறு உறிஞ்சி, வெறுந்தோல் மட்டும் மிஞ்சும்
படியாய் ருசித்து சாப்பிட்டார். “மஹா திருப்தி, மஹா திருப்தி” என்றார். “ஹேவ்வ்வ்” என ஏப்பமிட்டபடி மெல்ல எழுந்தார்.எழுந்தவருக்கு, புனிதவதி கையலம்ப நீர் தந்தாள். கைகளலம்பி துடைத்துக் கொண்டு, தன் தண்டத்தையும், கொப்பரையும், உடைமை களையும் எடுத்துக்கொண்ட சிவனடியார், புனிதவதியைக் கண்டு புன்னகைத்தார். அந்தப் புன்னகை மீண்டும் புனிதவதியை கிறக்கியது. ஒரு விதமான பேரமைதியில் அழுத்தியது.
இருகைகளையும் உயர்த்திய சிவனடியார்,“சிவோஹம். எக்காலத்தும் நின் பெயர் நிற்கட்டும் தாயே” என வாழ்த்தினார். தெருவில் இறங்கி நடந்து, கணநேரத்தில் காணாமல் போனார். வெண்ணிறக் காளையுடன் சிவனடியாரைக் கண்ட மிரட்சியா, அல்லது வந்த சிவனடியார் முகத்தில் ஒளியினைக்க ண்ட அயர்ச்சியா, எதனால் என தெரியவில்லை. புனிதவதி அந்த கிறக்கத்திலேயே இருந்தாள். சிவனடியார் சென்றபின்னும் அறையெங்கும் விபூதி வாசம் பரவியிருந்தது. அந்த வாசனையை ஆழ்ந்து சுவாசித்தபடி, அரை மயக்கத்தோடு தூணில் சாய்ந்து கொண்டாள்.
எப்போதும் அழைத்தபிறகே வரும் பரமதத்தன், அன்று ஈசனின் திருவிளையாடலினால், புனிதவதி அழைக்காது, தானே வலிந்து உணவு உண்ண இல்லம் வந்தான். தூணில் சாய்ந்தபடி இருக்கும் புனிதவதியைக் கண்டு, பதறிப் போனான். ஒருவேளை இன்னும் விரதத்தினை முடிக்காது இருக்கிறாளோ, அதனால் வந்த மயக்கமோ என பயந்தான். ஓடிவந்து மெல்ல “புனிதா, புனிதா” என உலுக்கினான்.
வேகமாகபோய், ஈரத்துணியை எடுத்து வந்து முகம் துடைத்தபோது, எப்போதையும்விட, இன்று அவள்முகம் மிகவும் பிரகாசமாக இருப்பதை கவனித்தான். முகத்தில் ஈரம் பட்டதும் விழித்த புனிதவதி, பரமதத்தனைக் கண்டதும் பரபரப்பாக எழ முயற்சித்தாள். பரமதத்தன் அவளை அமரும்படியாய் அழுத்தினான். ஆதுரமாய் தலை தடவினான்.
“புனிதா, ஏதேனும் மேலுக்கு முடியவில்லையா” என கேட்டபடியே பிரியத்துடன் கைகளை பற்றிக் கொண்டான். “ஒன்றுமில்லை அத்தான், என்னவென்று தெரியவில்லை, சற்று களைப்பாயியிருந்தது, அப்படியே சாய்ந்து விட்டேன். இப்போது பரவாயில்லை” என புனிதவதி பதிலுரைத்தாள்.
“விரதம் முடித்து விட்டாயா?”
“முடித்தாயிற்று”
“உண்டாயா?”
“நீங்கள் உண்ணாது நான் எப்போது உண்டிருக்கிறேன்’’ புனிதவதி பதறினாள்.
“என்னாயிற்று புனிதா”“மன்னியுங்கள், நான் மதியச் சமையலை முடிக்கவேயில்லை. அப்படியே அயர்ந்து விட்டேன்.
”“பரவாயில்லை, மீண்டும் கேட்கிறேன், உடம்புக்கேதும் முடியவில்லையா?
”“இல்லை அத்தான், நன்றாகத்தான் இருக்கிறேன். சில நிமிடங்கள் பொறுங்கள், உடனே, உணவை தயார் செய்து விடுகிறேன்” புனிதவதி பரபரத்தாள்.
“வேண்டாம் புனிதா, பதைக்காதே, இருப்பதை தா, எனக்கு மிகவும் பசிக்கிறது
”“சரி, தயிரன்னம் தரட்டுமா?
”“உடனே கொண்டுவா, பெரும் பசியாயிருக்கிறது” என சொல்லியபடி, பரமதத்தன் உண்ண அமர்ந்தான்.
புனிதவதி அடுக்களைக்கு ஓடினாள். தயிரன்னம் மீண்டும் பிசைந்தாள். கணவன்பங்கென வைத்திருந்த கடைசிப் பழத்தையும் அரிந்து துண்டுகளாக்கினாள்.
“நான் அனுப்பிருந்த மாம்பழமும் கொண்டுவா” என சொல்ல வாயெடுத்த பரமதத்தன், புனிதவதி தயிரன்னத்துடன், பழமும் கொண்டுவருவதை கண்டு, முகம் மலர்ந்தான். இலைபரப்பி புனிதவதியிட்டதை, உண்ணத் துவங்கினான். மாம்பழத் துண்டுகள் ருசித்தான். அந்த சுவையான மாம்பழத்தின் ருசியும்,வாசமும் அவன் பசியை மேலும் தூண்டியது.
“புனிதா
”“சொல்லுங்கள் அத்தான்
”“அருமையான, மிகவும் ருசியானப்பழம். இதன் மகத்தானவாசமே, மேலும் பசியைத் தூண்டுகிறது. இரண்டு பழங்களில் இன்னொன்று இருக்குமே, அதையும் கொண்டு வாயேன், இந்தமுறை அரியாமல், முழுபழமாய் கொண்டு வா” என கடைசிப் பழத்துண்டை கடித்துண்டபடி கேட்டான்.
புனிதவதி விக்கித்துப் போனாள். ஏதும் சொல்லாது, அடுக்களைக்குள் நுழைந்து, என்ன செய்வதென புரியாது நின்றாள். “அடியார்க்கு என் அனுமதி பெற்று பழத்தைத் தந்தாயா” என ஆகாத செயல் செய்ததைப்போல, தன்னை கணவன் ஏசுவானோ என பயந்தாள். “நீயே உண்டாயோ” என பழிச்சொல் கேட்க ஆளாவோமோ என கலங்கினாள்.பழமில்லை என பொய் சொல்லி விடலாமா என யோசித்தாள். ஆனால், பசியென கேட்பவனிடம், பழமில்லை என சொல்ல, மனம் வரவில்லை. கை பிசைந்தபடி நின்றவளை, பரமதத்தனின் குரல் அழைத்தது.
“இதோ, வருகிறேன்” என்ற புனிதவதி, சுவற்றில் மாட்டியிருந்த லிங்கரூப ஓவியத்தின் முன் நின்றாள். “என்அப்பனே, இதென்னச் சோதனை?.கணவன்கேட்டு இல்லையென்று சொன்னப்பழிக்கு என்னை ஆளாக்காதே. என்துயருக்கு வழிகாட்டு” என கையேந்தி மனமுருகி வேண்டினாள். கண்களைமூடி, பிராத்தித்தாள். சட்டென அந்தஅதிசயம் நிகழ்ந்தது.
அறையின் அந்தரத்தில், திடீரென திருநீறு பூசிய கரமொன்று முளைத்தது. புனிதவதியின் ஏந்திய கரங்களில், மாம்பழமொன்று தந்துவிட்டு மறைந்து போனது. ஈசனின் கருணைக்கு புனிதவதி மகிழ்ந்தாள். கூடத்திற்கு ஓடிவந்து முழுபழத்தையும் பரமதத்தனின் இலையில் வைத்துவிட்டு, ஓரமாய் நின்றாள். பரமதத்தன் மாம்பழம் கையிலெடுத்து, கடித்து உறிஞ்சினான். தேவாமிர்தமாயிருந்தது. இதன் ருசி, முன்பு உண்ட பழம் போல் இல்லையே என மெல்ல முகம் மாறினான். மீண்டும் உறிஞ்சினான்.
முன்பிருந்த பழத்தைவிட, இந்தப் பழத்திலுள்ள அமிர்த ருசிகண்டு வியந்தான். ஒருமர பழத்தின் ருசி ஒன்றையொன்று மாறுபடுமா என சிந்தித்தான். ஒருவேளை வேறு மாம்பழமோ என யோசித்தான். “புனிதவதி, நான் அனுப்பிய பழம்தானே இது” என கேட்டான்.ஒரு கணம் அவனை உறுத்துப் பார்த்த புனிதவதி, இல்லையென தலையாட்டினாள். அவன் அனுப்பிய பழத்தில் ஒன்றை சிவனடியாருக்கு தந்ததையும், இன்னொன்றை அவனுக்கு தந்ததையும் சொன்னாள். “அப்போது அமிர்தருசி கொண்ட இந்த பழமேது” பரமதத்தன் சற்றே குரலுயர்த்தி கேட்டான்.
“என் அப்பா தந்தது”
“யார் என் மாமனா”
“இல்லை, வானுறையும் நம் ஈசன்”
“என்ன சொல்கிறாய் புனிதா”
புனிதவதி சகலமும் சொன்னாள். அவன் பழம் கேட்டவுடன் பதைத்ததையும், அடுக்களையில் பிராத்தித்ததையும், அப்போது அந்தரத்தில் முளைத்த கரமொன்று, பழம் தந்ததையும் விவரித்தாள்.
பரம தத்தன் எழுந்து, புனிதவதியை நெருங்கி சிலநொடிகள் உறுத்துப் பார்த்தான். அவன் பார்வையைக் காணாது தலை குனிந்தவளைக் கண்டு, வெடிச் சிரிப்பு சிரித்தான். அறைமுழுதும் அலைந்த வண்ணம் விழுந்து விழுந்து சிரித்தான். வயிறு பிடித்தபடி, சிரிப்பை அடக்கியபடி, “விளையாடாதே புனிதவதி” என்றான்.
“இல்லைஅத்தான், நான்கூறியவை அனைத்தும் சத்தியம்” பரமதத்தன் முகம் சிவந்தான்.
“எது? இப்போது நீ சொல்லியதெல்லாம் சத்தியம்?”
“எப்போது உரைத்தாலும், சத்தியம்… சத்தியமே…”
“எனக்கு என்னமோ, உன் வழிபாட்டில் என்னை இழுக்க, தந்திரம் செய்கிறாயோ எனத் தோன்றுகிறது.”
“அதற்கு அவசியமில்லை, இதுவரை நான் உங்களை என் வழிக்கு அழைத்ததும் இல்லை, இழுத்ததும் இல்லை”
“நீ பொய்யுரைக்கிறாய் புனிதா”
“அதற்கும் அவசியமில்லை. நான் கேட்டேன், உடனே என் அப்பன் தந்தான். அதுவே நிஜம்”
‘‘நீ கேட்டவுடனே ஈசன் தந்தானா?” பரமதத்தன் மேலும் குரல் உயர்த்தினான்.
“ஆம்.”
“நீ விண்ணப்பித்ததும், உன் உள்ளங் கையில் பழம்ஈந்தானா?”
“ஆம்”
“அப்போதெனில், ஒருமுறை தந்த உம் ஈசனை, மறுமுறையும் தரச்சொல் பார்ப்போம்”
“என்ன சொல்கிறீர்கள்?”
“ நான் காண, மறுமுறையும் உன் ஈசனை தரச் சொல்லி கேள்.
”புனிதவதி அமைதியானாள். கண்மூடினாள். பெருமூச்செறிந்தாள். ஆவேசமாக,
“ வாரும் “ என கைப்பிடித்து, அடுக்களைக்கு அழைத்துப் போனாள். வரைந்திருந்த லிங்கரூப ஓவியத்தின் முன் கண்மூடி வேண்டினாள். மனதால் மன்றாடினாள். பின் இருகைகளையும் கையேந்தி, “ என் ஈசனே, என்பக்தி கண்டு, நீ பழம் தந்தது சத்தியமெனில், என் கணவர் காணும்படியாய் இன்னொரு பழமும் தந்தருள்வாய் என் அப்பா” என்று உரத்த குரலில் பேசினாள்.
சில நொடிகளில், அந்த அறை அனலாகியது. கூரையதிர, மீண்டும் அந்தரத்தில் கை முளைத்தது. முளைத்த கை நீண்டு, புனிதவதி ஏந்திய கைகளில் பழத்தை தந்துவிட்டு சட்டென மறைந்து போனது.
பரமதத்தன் காணக் கிடைக்காத அந்தக் காட்சி கண்டு, விழிகள் விரிய அதிர்ந்து போய் நின்றான். நா வறண்டு, சொல் சுருண்டு, பயந்தான். அவனுக்கு நெஞ்சுக்காரம் தொண்டைக்கு ஏறியது. கால்கள் தடுமாறியது. அவன் சமநிலைக்கு வர இயலாது தவித்தான். பழத்தை பெற்றுக் கொண்ட புனிதவதி, கண்களில் ஒற்றிக் கொண்டு, பரமதத்தனின் கைகளுக்கு மாற்றினாள்.
பரமதத்தன் மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்த அந்த மாம்பழத்தை உள்ளங்கையில் ஏந்தி மிரண்டபடி உற்றுப் பார்த்தான்.
“காணத்தானே பழம் கேட்டாய், கண்டு விட்டாயல்லவா, போதும்” என சொல்வதுபோல, அவன் உள்ளங்கை ஏந்திய மறுகணமே, மாம்பழம் சட்டென காணாமல் போனது.அடுக்கடுக்காக நிகழ்ந்த காட்சிகளை கண்டு, பரமதத்தன் மேலும் நாவறண்டு, பேச்சற்று, விக்கித்துப்போனான்.
(தொடரும்)
குமரன் லோகபிரியா
