×

தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்து போட்டோ வெளியிட்டதால் வாலிபருக்கு மது கொடுத்து குளத்தில் மூழ்கடித்து கொலை: சட்ட கல்லூரி மாணவன், உறவினர் கைது

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் சடலமாக மிதப்பதாக திருநாவலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை செய்ததில் அவர் நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி சுபாஷ் (25) என்பதும், கொலை செய்யப்படும் போது அவருடன் இருவர் இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் பிரகாஷ் (29), கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி அய்யனார் (22) ஆகிய இருவரும் சுபாஷை அழைத்து சென்றது தெரிந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் கூறியதாவது: சட்டக் கல்லூரி மாணவரான பிரகாஷின் தங்கையை கடந்த 4 வருடங்களுக்கு மேல் சுபாஷ் காதலித்து வந்ததாகவும், பின்னர் காதல் முறிவு ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து சுபாஷ் காதலிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ் பலமுறை எச்சரித்தும் கேட்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷின் தங்கையுடன் இருந்த சில போட்டோக்களை சுபாஷ் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் தனது உறவினர் அய்யனாருடன் சேர்ந்து சுபாஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் அய்யனார் மூலம் மது குடிப்பதற்காக அவரது நண்பரான சுபாஷை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது கிளியூர் கிராமத்தில் மதுவாங்கி 3 பேரும் குடித்துள்ளனர்.

இதில் சுபாஷை அதிகமாக மதுவை குடிக்க வைத்துள்ளனர். பின்னர் போதை தெளிய வேண்டும் என்றால் தண்ணீரில் குளித்தால் சரி ஆகி விடும் எனக் கூறி சுபாஷை அழைத்து சென்று கிளியூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதுபோல் நடித்து சுபாஷை குளத்தில் அழுத்தி மூழ்கடித்து கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், பிரகாஷ், அய்யனார் ஆகிய இருவரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

The post தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்து போட்டோ வெளியிட்டதால் வாலிபருக்கு மது கொடுத்து குளத்தில் மூழ்கடித்து கொலை: சட்ட கல்லூரி மாணவன், உறவினர் கைது appeared first on Dinakaran.

Tags : Ulundurpettai ,Thirunavalur police ,Kiliyur village ,Kallakurichi district ,Kallakurichi government ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது