×

ஸ்னாப் சாட் மூலம் பழகிய சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: மும்பை காதலன், ஆட்டோ டிரைவர் கைது

பூந்தமல்லி: கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘‘எனது 17 வயது மகளை காணவில்லை. அவளை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் யுவராஜ் தலைமையிலான போலீசார், சிறுமியின் தோழிகள், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். மேலும், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து, டவர் மூலம் தேடியபோது சிறுமி, பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்றுமுன்தினம் பெங்களூரு சென்று சிறுமி மற்றும் அவருடன் இருந்த விக்னேஷ் ஆகியோரை மீட்டு, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், சிறுமிக்கு, ஸ்னாப் சாட் மூலம் மும்பையைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 4 நாட்களுக்கு முன் விக்னேஷ், சிறுமிக்கு போன் செய்து திருவண்ணாமலை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். இதை நம்பிய சிறுமி, பெற்றோரிடம் சொல்லாமல் திருவண்ணாமலை செல்ல, வீட்டில் இருந்து ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து நிலையம் புறப்பட்டுள்ளார். சிறுமியிடம் பேச்சு கொடுத்த ஆட்டோ டிரைவர், ‘‘நீ தனியாக செல்லக்கூடாது. அது பாதுகாப்பு இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன்,’’ என்று கூறி, ஆட்டோவை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு, சிறுமியுடன் திருவண்ணாமலைக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார்.

அப்போது, சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், திருவண்ணாமலை சென்றதும், காதலன் விக்னேஷ், சிறுமியை பெங்களூரு அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விக்னேஷ் மற்றும் ஆட்டோ டிரைவரான கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (47) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். இதனிடையே பெற்றோரை வரவழைத்து சிறுமி ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஸ்னாப் சாட் மூலம் பழகிய சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: மும்பை காதலன், ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : SnapChat ,Poonthamalli ,Coimbed ,Mumbai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்