×
Saravana Stores

முதலீடு ரூ20,888 கோடி… மானியம் ரூ16,710 கோடி; குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசின் முடிவுகளை போட்டுடைத்தார் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி

பெங்களூரு: குஜராத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு 70 சதவீதம் மானியம் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்று ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில், கனரக தொழில் துறை அமைச்சராக எச்.டி.குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட குறைகடத்தி உற்பத்தியாளர் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி குஜராத்தில் இயங்குவது குறித்து ஆய்வு செய்தார். ரூ.20,888 கோடி மதிப்பில் நிறுவப்பட்ட இந்த உற்பத்தி ஆலையில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 5000 வேலைவாய்ப்புகளுக்கு அந்நிறுவனத்திற்கு ரூ.16,710 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.

அப்படியென்றால் ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்கும் ரூ.3.2 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு வேலைக்கு ரூ.3.2 கோடி என்பது பெரிய தொகை. பெரிய நிறுவனங்களுக்கு இதுபோன்ற மிகப்பெரிய தொகையை ஒன்றிய அரசு மானியமாக வழங்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முதலீடுகள் இந்தியாவிற்கு தேவையா என்று தொழில் துறை மற்றும் ஒன்றிய அரசின் நிதி மீதான அக்கறையில் கேள்வி எழுப்பினார். ஆனால் குமாரசாமியின் இந்த கருத்து பாஜவில் சர்ச்சையை எழுப்பியது. இதுதொடர்பாக கருத்து கூறியிருந்த அமைச்சர் குமாரசாமி, ‘5000 வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்திற்கு, அதற்காக நாம் அவர்களுக்கு ரூ.16,710 கோடியை மானியமாக வழங்குகிறோம். அந்த தொகை, நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் 70 சதவீதம் ஆகும்.

இவ்வளவு அதிகமான நிதி ஒதுக்குவது எந்த அளவுக்கு நியாயம் என்று அதிகாரிகளிடம் கேட்டேன்’ என்றார். ஒன்றிய அமைச்சர் குமாரசாமியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையும் சுட்டிக்காட்டி பேசவில்லை. என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் எனது பேச்சில் நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதை செய்வேன். என்னை நம்பி எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சகத்தை ஒப்படைத்த பிரதமருக்கு நன்றி. வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதுதான் எனது நோக்கம். அதில் அதிக கவனம் செலுத்துவேன்’ என்றார்.

The post முதலீடு ரூ20,888 கோடி… மானியம் ரூ16,710 கோடி; குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசின் முடிவுகளை போட்டுடைத்தார் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Kumaraswamy ,Modi government ,Gujarat ,Bengaluru ,Union Heavy Industries ,Minister ,Union government ,Modi ,Heavy ,Industries ,US ,Union ,Minister Kumaraswamy ,Dinakaran ,
× RELATED ஏடிஜிபி புகாரை ஏற்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு