×

காதல் திருமண பிரச்னையில் வாலிபரை கடத்திய விவகாரம் மிழக போலீஸ் ஏடிஜிபி கைது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: காதல் திருமண பிரச்னையில் வாலிபரை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்ட ஏடிஜிபி உயர் நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்பட்டார். மேலும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜெயராம் கைது செய்யப்பட்டார். ருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜய என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணின் தந்தை உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தபோது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஒரு கட்சியின் தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள ஜெகன்மூர்த்தியை கைது செய்ய வஜ்ரா வாகனம், 200 போலீசார் திரண்டதால் அந்த பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று வாதிட்டார். காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். கடத்தப்பட்ட வாலிபர், ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார். இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நேற்று பிற்பகல் நேரில் ஆஜராகுமாறு ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். ஆஜராக முன்வராவிட்டால் ஏடிஜிபியை கைது செய்து ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிற்பகல் தள்ளிவைத்தார். வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேரில் ஆஜராகினர். அப்போது, ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக காவல் துறை கூறுவது தவறு என்று வாதிட்டார். வல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத்குமார், டேவிட், வனராஜ் உள்ளிட்டோர் தனுஷ் வீட்டுக்கு சென்று அவரது சகோதரரை கடத்தியுள்ளனர். அவரை அருகில் இருக்கும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தியிடம் ஏடிஜிபி பேசியிருக்கிறார், இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத்குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதி, எந்த தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என்று ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெகன் மூர்த்தி, கே.வி.குப்பம் தொகுதியில் இருந்து 70 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, 70 ஆயிரம் பேர், அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேச தான் வாக்களித்தனர். ஆனால், அதை மறந்து கட்டப் பஞ்சாயத்து நடத்தி உள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா? எம்.எல்.ஏ. என்ற போர்வையை பயன்படுத்தி, பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. போலீசாரை தடுக்கும் வகையில் ஆட்களை சேர்த்து செயல்பட்டால் வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக தான் உங்களை கைது செய்ய உத்தரவிடவில்லை. தவறு செய்யவில்லை என்றால் எதற்காக இரண்டாயிரம் பேரை சேர்த்து காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள்? நீதிமன்றம் இதை வேடிக்கை பார்க்காது.

இனி இது போன்று நடந்தால் காவல் விசாரணையை தடுக்கும் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட நேரிடும். உங்களை நம்பி வாக்களித்தவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தமாக இது வரை உங்களை கைது செய்ய உத்தரவிடாமல் இருக்கிறேன். இல்லையென்றால் கட்சி மீது கூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும்.
எதற்காக நேற்று நூற்றுக்கணக்கானவர்களை என் வீட்டு வாசலிலும் நீதிமன்றத்திற்குள்ளும் அழைத்து வருகிறார்கள்? இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். மக்கள் பிரச்சினையை சட்ட ரீதியாகவோ, சட்ட மன்றம் மூலமாகவோ நீங்கள் தீர்க்க வேண்டும். கட்டப் பஞ்சாயத்து மூலமாக அல்ல. விசாரணைக்கு செல்லுங்க. கூட யாரும் போக கூடாது. யாராவது கூட சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். விசாரணையின் போது கைது செய்ய கூடாது என்று உத்தரவிட முடியாது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெகன் மூர்த்தியை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அவரது வழக்கறிஞர்கள் அழைத்து சென்றனர்.

வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமை ஏன் கைது செய்யவில்லை. எம்.எல்.ஏ.வையும், ஏடிஜிபியையும் சமமாக கருத முடியாது. வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் விசாரணைக்கு எம்.எல்.ஏ. ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு ஊழியருக்கு சலுகை வழங்க முடியாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இது ஒரு செய்தியாகும். ஏடிஜிபிக்கு இந்த குற்றத்தில் தொடர்புள்ளதற்கான ஆதாரத்தை அரசு தரப்பு தாக்கல் செய்துள்ளது. கைதான இருவரின் வாக்குமூலத்தில் ஏடிஜிபிக்கும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து விசாரணை நடத்துங்கள். அவர் ஜாமீன் கேட்டு கீழமை நீதிமன்றத்திற்கு செல்லட்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற போலீசார் ஏடிஜிபி ஜெயராமை போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றனர். ஜெயராம் நீதிமன்றம் வரும்போது அதிகாரிக்கான காரில் வந்தார். பின்னர் அவரது கார் ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் போலீசார் பாதுகாப்புடன் திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு ஏடிஜிபி ஜெயராமன் அழைத்து வரப்பட்டார். அவர் மீது ஆள் கடத்தல், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு திருத்தணி குற்றவியல் நடுவர் நீதிபதி வெங்கடேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post காதல் திருமண பிரச்னையில் வாலிபரை கடத்திய விவகாரம் மிழக போலீஸ் ஏடிஜிபி கைது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mizhaga Police ADGP ,Chennai High Court ,Chennai ,ADGP ,High Court ,Revolutionary Bharatiya Janata Party ,MLA ,Jagan Murthy ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு