×

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு எதிர்ப்பு குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு: அமலாக்கத்துறை பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கின் அடுத்தகட்டமாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜனவரி 22ம் தேதி (நேற்று) ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, குற்றச்சாட்டுக்கள் பதிவை தள்ளிவைக்க கோரப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், ஏற்கனவே, இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், ஆந்திர உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, இரு மனுக்களுக்கும் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 29க்கு தள்ளி வைத்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 29ம் தேதிவரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

* ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு கடந்த வாரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு எதிர்ப்பு குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு: அமலாக்கத்துறை பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Principal Sessions Court ,CHENNAI ,Enforcement Department ,
× RELATED ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர்...