×

கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை, புதிய கல்லூரி கட்டுமான பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை, புதிய கல்லூரி கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். 2024-25ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் எழும்பூர், சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றிடும் வகையில் ரூ.25 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1,035 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் கடந்தாண்டு ரூ.1.78 கோடியில் பள்ளி கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன.

மேலும், இப்பள்ளிக்கு கூடுதலாக ரூ.11.15 கோடியில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், 5 ஆய்வங்கங்கள் கட்டும் பணி நடந்து வருகின்றன. மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் சார்பில் கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் இக்கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 23.12.2024 அன்று அடிக்கல் நாட்டினார். வரும் கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் புதிய கட்டிடத்தில் நடைபெறும் வகையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கல்லூரி புதிய கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

 

The post கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை, புதிய கல்லூரி கட்டுமான பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Hindu Religious Endowments Department ,Srinivasa Perumal Temple ,Egmore… ,Dinakaran ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...