×

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 45.5 சதவீதமாக குறைந்துள்ளது

சென்னை: சென்னையில் மகப்பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைத்திட வல்லுநர்களின் விரிவான கருத்துகளை செயல்படுத்துவதற்காக “விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றிணைத்தல்“ என்ற தலைப்பில் பயிலரங்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். கடந்த 10 ஆண்டு மகப்பேறு இறப்பு விகித பகுப்பாய்வு குறித்த கையேட்டினையும் அவர் வெளியிட்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான தாய்மார்களின் இறப்பு விகிதம் 1 லட்சம் பிறப்புகளுக்கு 70 என்றிருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை 54 என்கின்ற அளவில் குறைந்திருந்தது. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தியது, தமிழ்நாட்டின் மருத்துவச் சேவையை தரம் உயர்த்தியது, மருத்துவர்களின் அந்த கடுமையான உழைப்பை ஒருங்கிணைத்தது போன்ற பல்வேறு விஷயங்கள் காரணமாக ஒரே ஆண்டில் 54 சதவீதம் என்பது நடப்பாண்டில் 45.5 சதவீதமாக குறைந்திருக்கிறது.

இன்றைக்கு 99.9 சதவீதம் மருத்துவமனைகளிலேயே பிரசவங்கள் நடக்கிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் 59 சதவீதம் பிரசவங்கள் நடக்கிறது. கர்ப்பகால சிக்கல்கள் உள்ள தாய்மார்களை கண்டறிந்து நல்ல முறையில் சிகிச்சை வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என்கின்ற வகையில் விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் மகப்பேறு பராமரிப்பு மையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்திருக்கிறது என்று சொல்லி இந்தியாவில் 2ம் பரிசு கடந்த ஆண்டு தரப்பட்டது. ரத்த சோகையை தடுப்பதற்காக தகவல் கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு ஒன்றிய அரசின் முதல் பரிசு கிடைத்துள்ளது.

இதுவரை விருதுநகர் மாவட்டம் மகப்பேறு இறப்பு “பூஜ்ஜியம்” என்கின்ற அளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாவட்ட சுகாதார அலுவலர்களும் இதனைப் பின்பற்றி மகப்பேறு இறப்பு “பூஜ்ஜியம்” என்கின்ற அளவில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 45.5 சதவீதமாக குறைந்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Tamil Nadu ,Chennai ,Subramanian ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு...