×

சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டு பொருட்கள்

குமரி மாவட்டத்தில் நெல், வாழை, ரப்பர், தென்னை, அன்னாசி ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்த விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவது, மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது ஆகியவற்றில் விவசாயிகள் பின்தங்குவதால், அவர்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு உற்பத்தி பொருட்களை வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை பயிற்சி வழங்கி வருகிறது.அதன்படி சில விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கிறார்கள். குமரி மாவட்டத்தில் குறிப்பாக நேந்திரம் வாழை அதிக அளவு பயிரிடப்படுகிறது. இதில் இருந்து சிப்ஸ் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து தோவாளை வட்டார விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் விவசாயிகள் உற்பத்தி செய்யும், விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தி அதிக லாபம் கிடைக்கும் நோக்கில் இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. லாபத்தில் ஒரு சிறிய தொகை இந்த சங்கத்திற்கு வந்து சேரும். இதனைத் தவிர சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் குடும்பத்தலைவிகளாக உள்ள பெண்களுக்கு விவசாயப் பொருட்கள் மூலமும், மதிப்புக்கூட்டு பொருட்கள் விற்பனை மூலமும் வருவாய் கிடைத்து வருகிறது.

“குமரி மாவட்டத்தில் கடுக்கரை, திடல், காட்டுப்புதூர், ஈசாந்திமங்கலம், இறச்சகுளம், பூதப்பாண்டி, சீதப்பால், ஆரல்வாய்மொழி, செண்பராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பெண்கள் நேரடியாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் செய்யும் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும் வகையில் தோவாளை வட்டார விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தில் ஒருங்கிணைப்பாளராக மாரீஸ்வரி, துணைத்தலைவர் சுகந்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆனந்தி, ஷைலா, எஸ்தர்ராணி, அஜிதா, கோசலை, பத்மா, பேச்சியம்மாள், சண்முகசுந்தரி, கலா ஆகியோர் உள்ளனர். சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர்.

உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், வாழை, நெல் ஆகியவற்றை சங்கம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். சங்கம் தொடங்கப்பட்டு சுமார் 8 மாத காலம் ஆகிறது. இன்னும் ஒரு மாதத்தில் விளைபொருட்கள் இந்த சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. அதன்பிறகு சங்கத்திற்கு வருமானம் மற்றும் உறுப்பினர்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கும்.இந்த நிலையில் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடிவு செய்தோம். அதன்படி தினை லட்டு, கொள்ளு லட்டு, ராகி முறுக்கு, தினை முறுக்கு, கம்பு அப்பம், கம்பு லட்டு, பருப்புப்பொடி, கொள்ளுப்பொடி ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு விற்பனை செய்ய தொடங்கினோம்.

தற்போது குறைந்த அளவு உற்பத்தி செய்து, சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இதில் குறைந்த அளவு வருமானம் கிடைக்கிறது. தினை, கொள்ளு, கம்பு ஆகியவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் லட்டு ரூ.8க்கு விற்பனை செய்கிறோம்.தமிழக அரசு திருச்சியில் நடத்திய வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில், நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களைக் கொண்டு ஸ்டால் அமைத்து இருந்தோம். பாரம்பரிய உணவுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நாங்கள் சிறுதானியங்களை கொண்டு செய்யும் பாரம்பரிய உணவுகளை பெரிய அளவிற்கு சந்தைப்படுத்த உள்ளோம். இதன் மூலம் சங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் வருவாய் கிடைக்கும்.
பருப்புப் பொடி, கொள்ளுப்பொடி, தவளைப்பொடி ஆகியவற்றை சோற்றில் கலந்து சாப்பிட்டால் அதிக சத்துடன், அதிக சுவையுடன் இருக்கும். தவளைப்பொடி என்பது தேங்காய்ப்பூ, உளுந்து, கடலை, மல்லி, காயம், புளி அகியவற்றை கொண்டு வறுத்து பொடியாக்கப்பட்டதாகும். நாங்கள் பருப்புப்பொடி கால் கிலோ ரூ.120க்கும், கொள்ளுப்பொடி ரூ.120க்கும், தவளை பொடி கால்கிலோ ரூ.200க்கும் விற்பனை செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை சங்கத்தின் மூலம் சந்தைப்படுத்தி, அதிக லாபம் கிடைக்கும்போது பெண்கள் மனதில் ஒரு தன்னம்பிகை உருவாவதோடு, குடும்ப வருமானம் அதிகமாகும்’’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் சங்கத்தின் தலைவர் தங்கமும், செயலாளர் கீதாவும். தினை லட்டு தயாரிக்கும்போது தினைமாவுடன் சுக்கு பொடித்து சேர்க்கவேண்டும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை பாகு காய்ச்சி மாவில் விட்டு பிசைந்து லட்டாக தயாரிக்கவேண்டும். சர்க்கரை பாவுக்கு பதிலாக தேனும் கலந்து லட்டு தயாரிக்கலாம்.கம்பு லட்டு தயாரிக்கும் போது இதே முறையில் கம்பு மாவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் கொள்ளுலட்டு தயாரிக்கும் போது ஒரு கப் கொள்ளு எடுத்தால், அரை கப் கருப்பு உளுந்து, கால்கப் நிலக்கடலை, கால் கப் எள் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். நெய்யில் வறுத்த முந்திரியையும் இந்த பொடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை பாகுவை ஊற்றி லட்டாக தயாரிக்கலாம். ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுடன், சுவையும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.
தொடர்புக்கு:
தங்கம் -77083 06356
கீதா- 99523 60258

The post சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டு பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் பேரிடர் மீட்பு ஒத்திகை 1600 மாணவர்கள் பங்கேற்பு