*திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி வாக்குறுதி
தொண்டாமுத்தூர் : பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்னைகளை கண்டறிந்து உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கே.ஈஸ்வரசாமி நேற்று பேரூர் பேரூராட்சியில் இருந்து பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து, பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் மாதம்பட்டி ஊராட்சி பகுதிகள், தென்கரை, பூலுவபட்டி மற்றும் ஆலாந்துறை பேரூராட்சி பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் சென்ற இடங்களில் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து, கும்பம் மரியாதை செய்தனர்.
பிரச்சாரத்தில், திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி பேசுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களையும் கொடுக்காமல், வஞ்சிக்கக்கூடிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளார். பெண்களின் அரசாக விளங்கக்கூடிய திராவிட மாடல் நாயகரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
மத்தியிலே நமக்கு இணக்கமான அரசை உருவாக்க வேண்டும். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கைகாட்டுகின்றவர் தான், மத்தியிலே பிரதமராக வர வேண்டும். நாமெல்லாம் ஒன்றிணைந்து நமது பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியிலே உதயசூரியனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
மோடியின் அரசுக்கு அடிமை அரசாக இருந்த எடப்பாடியார் இஸ்லாமிய மக்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவும் சந்தர்ப்பத்திற்காக இருவரும் வேட்பாளர்களாக பிரிந்து நிற்கின்றனர். ஆனால் இருவரும் ஒருவர்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மோடிக்கு ஆதரவாக இருந்தாலும், எடப்பாடி ஆதரவாளர்கள் வெற்றி பெற்றாலும் அவருடைய வேட்பாளர் வெற்றி பெற்றாலும் மோடிக்கு ஆதரவாக தான் செயல்பட போகின்றார். எடப்பாடிக்கு வாக்களிப்பதும், மோடிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.
அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், மகளிருக்கு பேருந்தில் இலவச பயண திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற பின்பு, மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை திட்டம் யாருக்கெல்லாம் விடுபட்டு இருக்கிறதோ அவர்களுக்கும் வழங்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன் நமது பகுதியின் மையப்பகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் உருவாக்கப்படும்.
மக்களுடைய பிரச்னைகளை எளிதில் கையாண்டு உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வேட்பாளர் ஈஸ்வரசாமி பேசினார். பிரச்சார நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், ஏர்போர்ட் ராஜேந்திரன், பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் நாராயணசாமி, சந்தோஷ், தாமரை செல்வன், தீத்திபாளையம் ஊராட்சி தலைவர் புல்லட் கந்தசாமி, தியாகராஜன், ஜெகன், இன்ஜினீயர் பிரகாஷ், ஆலந்துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, சண்முக பிரகாஷ், ஏகே ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பொள்ளாச்சி தொகுதி பொது மக்கள் பிரச்னைகள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.