×

சந்தையில் இடம்பிடிக்க நிறுவனங்கள் தீவிரம் இந்த ஆண்டு களமிறங்கும் 81 புதிய கார்கள்

இந்திய கார் சந்தை, வெகு வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. இதற்கு முன்பு சிறிய கார்களுக்கு அதிக மவுசு இருந்தது. நடுத்தர மக்கள் பலர், சிறிய ரக கார்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு, நடுத்தர மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் கார்கள் வரிசைகட்டி வந்தன. குறைந்த விலையில், எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய கார்களுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. தற்போது காலம் மாறி விட்டது. நடுத்தர மக்களும் எஸ்யுவி கார்களை வாங்க விரும்புகின்றனர்.

இதை, கடந்த ஒரு சில ஆண்டுகளில் கார் விற்பனை புள்ளி விவரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இதை உணர்ந்து, பெரும்பாலான கார் நிறுவனங்கள், சிறிய ரக கார்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து விட்டன. கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வாகனச் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் 81 புதிய கார்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

கடந்த ஆண்டில் 54 கார்கள் புதிய மாடல்களாக வெளிவந்தன. இதில் 37 கார்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ளதை மேம்படுத்தி பேஸ்லிப்ட் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டன. 17 முற்றிலும் புதிய கார்கள். இதுபோல் நடப்பு ஆண்டில் வெளிவர உள்ள 81 மாடல்களில் முற்றிலும் புதிய மாடல்களாக 54 கார்கள், புதிய அம்சங்களுடன் வெளிவர உள்ளன. 27 கார்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ள கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக வெளிவர உள்ளன என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட மாடல்களை பொறுத்தவரை கிரில், டெயில் லைட், ஹெட்லைட் போன்றவை மேற்கொள்ளப்பட்டிருக்கும். எஸ்யுவி மாடல்களுக்கு நடுத்தர மக்களிடையே வரவேற்பு உள்ளதால், மாருதி ஜிம்னி போன்ற 21 புதிய எஸ்யுவிக்கள் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, எலக்ட்ரிக் வாகனங்களும் சந்தைப்படுத்தப்பட உள்ளன. மேலும், சொகுசுக் கார் நிறுவனங்கள் 38 புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கார்களை பொறுத்தவரை, அதிகபட்சமாக மெர்சிடிஸ் பென்ஸ் 8 முதல் 9 கார்கள், ஆடி 6 கார்கள், மாருதி சுசூகி நிறுவனம் 4 முதல் 5 கார்கள், ஹூண்டாய் 4 கார்கள், ஸ்கோடா மற்றும் போக்ஸ்வேகன் 3 கார்கள் டாடா மோட்டார்ஸ் 6 கார்கள் சந்தைப்படுத்தும் என நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் நடப்பு நிதியாண்டு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும், கார் பிரியர்களுக்கும் குதூகலமான ஆண்டாக இருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post சந்தையில் இடம்பிடிக்க நிறுவனங்கள் தீவிரம் இந்த ஆண்டு களமிறங்கும் 81 புதிய கார்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...