×

விளிம்புநிலை பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி

நன்றி குங்குமம் தோழி

“கணவர் எனக்கு சரியில்லை… குடிச்சுட்டு வந்து தினமும் அடிக்கிறாரு… என் கையிலையும் காசிருந்தா, வேண்டாம்னு அந்த ஆள விட்டுட்டு போயிக்கிட்டே இருக்கலாம்… என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல…”“என் குழந்தைகளையும் என்னையும் அம்போன்னு நடுத்தெருவுல விட்டுட்டு போயிட்டாரு… தனியா நின்னு வருமானத்துக்கு கஷ்டப்படுறேன். பிள்ளைகளுக்கு நேரத்துக்கு சாப்பாடு கொடுக்க முடியல… படிக்கவும் வைக்க முடியல… என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல…”“என் அப்பாவுக்கு வருமானம் கம்மி. அம்மாவும் வீட்டு வேலைதான் செய்யுறாங்க. காலேஜ் முடிச்சதும் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து, நல்ல நிறுவனத்தில் வேலைக்கு போக எனக்கு ஆசை. இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். என்ன பண்றதுன்னே தெரியல…”

இப்படியான நிலைகளில் வாழ்க்கையை எதிர்கொள்ள தவிக்கும் விளிம்பு நிலைப் பெண்களை கண்டுபிடித்து, அவர்களின் தகுதி மற்றும் படிப்புக்கு ஏற்ப “ஹோம்கேர் நர்ஸ் டிரெயினிங், ஓட்டுநர் பயிற்சி, கம்ப்யூட்டர் டிரெயினிங்” என பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் anew (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பு. வீட்டு வேலை செய்கிற பெண்ணின் மகள் தன் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலை செய்யத்தான் செல்கிறார். பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கிற பெண்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதில் விழிப்புணர்வு இல்லை.

இதை உணர்ந்த எம்.கே.குமார் மற்றும் லெக்ஷ்மி குமார் இருவருமாக இணைந்து, தங்களின் கார் நிறுத்தும் இடத்தில் 7 பெண்களோடு ஹோம்கேர் நர்ஸிங் புராஜக்ட் ஒன்றினை 1997ல் தொடங்கினார்கள். அவர்கள் போட்ட விதை இன்று வளர்ந்து மரமாகி, விருட்சமாகி கிளைவிடத் தொடங்கியுள்ளது. 26 ஆண்டுகளைக் கடந்துவிட்ட “ஆன்யூ” அமைப்பில் தற்போது வினோதினி சுசீந்திரன் மற்றும் டாக்டர் அனுசந்திரன் இருவரும் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர்கள் ஹெட் ஆப்ரேஷன்ஸ் பொறுப்பில் இருக்கும் சித்ராவும், சீனியர் மேனேஜர் சுஜித்தாவும்.

“ ‘ஆன்யூ’ வின் தொடக்கம் பெண்களுக்கான ஹோம்கேர் நர்ஸிங் பயிற்சி என்பதாக மட்டுமே தொடக்கத்தில் இருந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள் ஹோம்கேர் நர்ஸிங் செய்வதற்கான தேவைகள் அதிகமாக இருக்க, தமிழ் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்த, எட்டாவது வரை படித்த பெண்களை தேர்வு செய்து, முறையான பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தோம். 6 மாதங்கள் வழங்கப்படும் பயிற்சியில் முதல் 3 மாதங்கள் தியரி வகுப்புகளும், அடுத்த 3 மாதங்கள் பிரபல மருத்துவமனைகளில் நேரடி பயிற்சிகளும் இருக்கும்.

சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன், அப்பாசாமி மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, சவுந்தரபாண்டியன் போன் அண்ட் ஜாயின்ட் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா, பேன்யன் மனநல அமைப்பு, முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்களுக்கு நேரடி பயிற்சிக்கு அனுப்பி வருகிறோம். இதில் ஆர்வமாக பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு சீருடை, புத்தகம், அடையாள அட்டை போன்றவை இலவசமாய் வழங்கப்படுவதுடன், போக்குவரத்து செலவுக்கு மாதம் 800 கணக்கிட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை 2400 உதவித் தொகையாக பயிற்சிக் காலத்தில் வழங்கப்படுகிறது. பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்ச்சிப் பெற்ற பெண்களுக்கு ‘ஆன்யூ’வுடன் சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனும் இணைந்து ஹோம்கேர் நர்ஸிங் சான்றிதழை வழங்குகிறது. சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

சுத்தமாக எழுதப் படிக்கத் தெரியாத, குடிசைப் பகுதிகளில் வாழுகிற பெண்களை மனதில் வைத்து, ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர் பயிற்சிகளையும் வழங்குகிறோம். எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது. நான் எப்படி சம்பாதிப்பேன் என்கிற பெண்களே இதில் எங்களின் தேர்வு. இந்தப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி, டிரைவிங் திறனை அவர்களிடம் வளர்ப்பதுடன், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் முறை, வாடிக்கையாளர்களை அணுகுவது, வாடிக்கையாளர்களிடம் பேசும் முறைகளையும் கற்றுத் தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையில் இருக்கிறார்கள்.

‘ஆன்யூ’வில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற கயல்விழி மற்றும் வீரலட்சுமி இருவருமே இன்று அரசு பொது மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் டிரைவர்களாக பணியில் இருக்கிறார்கள். மேலும் சிலர் ஏர்போர்ட், மெட்ரோ ரயில் நிறுவனம், மால்களில் எலெக்ட்ரிக் பக்கிஸ் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், சவேரா, க்ரீன் பார்க் போன்ற உணவகங்கள் வாடிக்கையாளர்களின் கார்களை வேலட் பார்க்கிங் செய்வதற்கு பெண்களை ஓட்டுநர்களாக நியமித்துள்ளனர். இன்னும் சில பெண்கள் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள். மொபைலை ஆன் செய்தாலே இவர்களுக்கு சவாரி கிடைத்துவிடுகிறது. சிலர் சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்கள். மேலும் சில பெண்கள் தனி டிரைவர்களாகவும் வீடுகளுக்கு செல்கிறார்கள்.

ஓட்டுநர் பயிற்சி எடுத்த பெண்களுக்கு அரசு மானியத்தில் ஆட்டோ பெற்றுத் தருவதுடன், ரோட்டரி கிளப், நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் ஆட்டோக்களை வாங்குவதற்கான உதவிகளையும் செய்து தருகிறோம். பெண்களில் பலர் சொந்த ஆட்டோ உரிமையாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கிறார்கள். சிலர் சொந்தமாக வீடும் வாங்கியுள்ளனர்.மேலும், அண்ணா நகரைச் சுற்றியுள்ள பெண்கள் கல்லூரிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கி, வறுமை நிலையில், போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் குடும்பத்தின் பெண் குழந்தைகளை அணுகி, கம்ப்யூட்டர் திறன் பயிற்சி பெறுவதற்கு அவர்களை இங்கு அழைத்து வருகிறோம்.

இதில் ஏதாவது ஒரு டிகிரியென படிக்கும் பெண்களுக்கு அடிப்படை கணிப்பொறி பயிற்சியாக Ms Office பயிற்சி வழங்கப்படும். பி.காம் படிக்கும் பெண்கள் என்றால் டேலி(Tally), பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ மாணவிகள் என்றால் பைத்தான்(Python) பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது தவிர்த்து எங்களிடம் இ-பப்ளிஷிங் மற்றும் வெப் டெவலப்பிங் பயிற்சிகளும்
உண்டு. பயிற்சி முடித்தவர்களுக்கு NIIT நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் போதே, ஸ்போக்கன் இங்கிலீஷ், தற்காப்புக்கலை, வாழ்க்கைத் திறன் மேம்பாடு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. ‘ஆன்யூ’வில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவிகளில் பலரும் டி.சி.எஸ், சி.டி.எஸ், அஸன்ஜெர் போன்ற ஐடி நிறுவனங்களில் பணியில் இருக்கிறார்கள்.

கலைவாணிஹோம்கேர் நர்ஸிங் டிரெயினர்.ஹோம்கேர் நர்ஸிங் செய்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். தமிழ் கட்டாயம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு சாப்பாடு கொடுப்பது, நடக்க வைப்பது, குளிக்க வைப்பது, படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவுவது, மருந்துகளை கையாளுவது என நோயாளிகளை கவனிப்பதற்கான அனைத்து பயிற்சிகளுமே இதில் இருக்கும். பிறந்த குழந்தைகளை பாதுகாப்பாக குளிக்க வைப்பதற்கான பயிற்சியும் இதில் உண்டு.

எங்களிடம் பயிற்சி எடுத்து தனித்துவமாக முதியோர் இல்லம் நடத்தும் அளவுக்கு திறன் பெற்ற பெண்களும் இருக்கிறார்கள். வீட்டிலிருக்கும் முதியவர்கள், குழந்தைகள், வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வயது முதிர்ந்த பெற்றோர், மாற்றுத்திறனாளிகளை கவனிக்கவும், சில மருத்துவமனைகளில் நர்ஸிங் உதவியாளர்களாகவும் நல்ல ஊதியத்தில் இவர்கள் பணியமர்த்தப் படுகிறார்கள்.

கீதாஞ்சலி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்

கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமையில் உழலும் பெண்கள், போதையில் கணவனின் அடிக்கு ஆளாகும் பெண்கள், குழந்தைகளோடு சிங்கிள் மதராக தவிக்கும் பெண்கள் என எங்களிடத்தில் வரும் பெண்களின் கதைகள் சோகத்தின் உச்சம். பெரும்பாலும் தவித்த மனநிலையோடு வந்தே எங்களை அணுகுவார்கள். அவர்கள் பின்னணி குறித்து அறிந்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்த பிறகே ஓட்டுநர் பயிற்சி வழங்குகிறோம். நம்பிக்கையோடு இரண்டே நாட்களில் கற்று ஆட்டோ ஓட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

டிரைவிங் சிமுலேஷன் பயிற்சிக்கு மாருதி ஓட்டுநர் பயிற்சி பள்ளி மற்றும் வேறு சில ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு முதலில் அனுப்புகிறோம். இவர்களுக்கு ஆகும் செலவுகளை ‘ஆன்யூ’ முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. பயிற்சி முடித்து ஓட்டுநர் உரிமமும், கமர்ஷியல் வாகனங்களை ஓட்டும் பேட்ஜ் பெற்றதுமே, பயமின்றி சாலைகளில் வாகனங்களை ஓட்ட பிரத்யேக பயிற்சியாளர்களைக் கொண்டு ‘ஆன்யூ’ கூடுதல் பயிற்சிகளைத் தருகிறது. அதன்பிறகே அவர்கள் நம்பிக்கையுடன் வாகனங்களை ஓட்டுகின்றனர்.

ஜெயந்தி சீனியர் கம்ப்யூட்டர் டிரெயினர்

கல்லூரியில் படிக்கும் பெண்கள் தவிர்த்து 35 வயது வரை இருக்கும் பெண்களையும் கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். சில பெண்கள் கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்தபிறகு டிகிரி படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணமான பெண்களும் கம்ப்யூட்டர் படிக்க வருகிறார்கள். இதில் பேஸிக் கம்ப்யூட்டர், டேலி, பைத்தான், இ-பப்ளிஷிங், வெப் டிசைனிங் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். டெக்னிக்கலாக மட்டும் பயிற்சிகளை வழங்காமல்.

பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்குத் தேவையான ஸ்போக்கன் இங்கிலீஷ், கெரியர் கைடென்ஸ், டெக்னிக்கல் பிரசன்டேஷன், கோல் செட்டிங் பிரசன்டேஷன், குரூப் டிஸ்கஷன், பிஸ்னஸ் கேம்ஸ் என எல்லாமும் இதில் உண்டு. பேஸிக் கம்ப்யூட்டர் முடித்தாலே சொந்தமாக கடை வைத்து விசிட்டிங் கார்ட் அடிக்கும் அளவுக்கு பயிற்சிகள் தரமானதாக இருக்கும். பயிற்சிகளை முடித்ததுமே தேர்வு வைத்து, என்.ஐ.ஐ.டி நிறுவன சான்றிதழும் வழங்கப்படும். எங்களிடம் பயிற்சி பெற்ற பல பெண்கள் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

The post விளிம்புநிலை பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Saffron ,Casirunta ,Dinakaran ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!