ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்
லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை
ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா
காமேஸ பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா…
இந்த நாமத்திற்கான பொதுப் பொருளானது விவாக காலத்தில் காமேஸ்வரனால் கட்டப்பட்ட சௌபாக்கிய ஆபரணமான திருமாங்கல்யத்தினால் சோபிதமான கழுத்தை உடையவள் என்பதாகும். இந்த நாமம் அம்பிகையின் கழுத்தை வர்ணிக்கின்றது. இதற்கு முன்னால் புன்னகை, பற்கள், உதடுகள் என்று ஒவ்வொன்றாக வந்தது. இப்படி கழுத்துப் பகுதியை வர்ணிக்கும்போது நேரடியாக கழுத்தைச் சொல்லாமல் காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபிதகந்தரா… காமேஸ்வரர் கட்டிய மாங்கல்யம் எங்கு பிரகாசிக்கிறதோ அந்த கழுத்தை உடையவளென்றும் பொருளுண்டு. அப்போது ஒரே நேரத்தில் கழுத்தினுடைய பெருமையையும் சொல்வதுபோல் ஆகிவிட்டது.
அந்த கழுத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய காமேஸ்வரர் கட்டிய மாங்கல்யத்தினுடைய பெருமையையும் சொல்வதுபோல் ஆகிவிட்டது. அப்போது காமேஸ்வரர் கட்டிய மாங்கல்யம் எவ்வளவு பெருமையை உடையது. அந்த மாங்கல்யம் விளங்கக் கூடிய கழுத்து எவ்வளவு பெருமையை உடையது இதை இரண்டையும் ஒரே நாமாவில் வர்ணிக்கிறார்கள். இந்த காமேஸ்வரர் எந்த கழுத்தில் மாங்கல்யம் கட்டினாரோ… அந்த அழகான கழுத்தை உடையவள். இது இந்த நாமாவினுடைய நேரடியான அர்த்தம். இப்போது இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போய் பார்ப்போமா!
இதற்கு முந்தைய நாமாவில் முகவாய் கட்டையைச் சொல்லும்போது அனாகலித சாத்ருச்ய சிபுக ஸ்ரீவிராஜிதா… அதற்கும் முந்தைய நாமத்தில் புன்னகையைச் சொல்லும்போது மந்தஸ்மித பிரபாபூர மஜ்ஜத் காமேச மாநஸா… என்று சொன்னார்கள். இந்த நாமாவில் மனதினுடைய பரிமாணங்களை காண்பித்தார்கள். அனாகலித சாத்ருச்ய… நாமத்தில் நாம் பேசக்கூடிய விஷயம் என்பது உவமைகளுக்கு உட்படாதது. நாம் உவமைகளால் சொல்ல முடியாதது.
நம்முடைய மனதாலும் வாக்காலும் என்னவென்று சொன்னால் அதை விளக்க முடியாது. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட விஷயம் என்று சென்ற நாமாவில் பார்த்தோம். இப்படி எந்த வகையிலுமே அடைய முடியாது என்றால் அந்த ஒரு விஷயத்தைப்பற்றி நாம் எதற்கு பேச வேண்டும் என்று ஒரு கேள்வி வரும்.
நாம் வைத்திருக்கிற அந்த limitations மூலமாக அடைய முடியாது. ஆனால், அடையவே முடியாது என்றும் சொல்ல முடியாது. அடையலாம்… எப்படி அடையலாம் எனில் நாம் அதை தேர்ந்தெடுத்து அடைய முடியாது. அது நம்மை தேர்ந்தெடுத்து விட்டால் நாம் அடையலாம். எப்படியெனில்… காமேஸ பத்த மாங்கல்யம்… காமேஸ்வரர் எப்படி மாங்கல்யத்தை அம்பாளின் கழுத்தில் சேர்த்தாரோ… அதுபோல… அந்த வஸ்து நம்மை தேர்ந்தெடுத்தது என்றால் நாம் அதை அடையலாம். காமேஸ பத்த மாங்கல்யம்… பத்தம் என்றால் கட்டுதல் என்று பொருள். இப்போது இங்கு நாம் உலகியல் நிலையில் கட்டுப்பட்டிருக்கிறோம். இது உலகியலில் கட்டுப்பட்ட நிலை.
இந்த கட்டு விலகவேண்டுமெனில் இதைவிட strong ஆன ஒரு கட்டு அமையணும். அதுதான் காமேஸ பத்தம். அப்போது மாங்கல்யம் என்பதுதான் இருப்பதிலேயே storng ஆன கட்டு. அந்த முடிச்சு நிலையான முடிச்சு. இரண்டு பேருடைய பந்தத்தை வாழ்க்கை முழுவதும் சேர்த்து வைக்கக் கூடியது. சாதாரணமாக லௌகீகமாக பார்த்தாலேயே… அப்போது சாதாரண லௌகீகத்திலேயே மாங்கல்யம் அத்தனை உறுதிமிக்கது எனில் காமேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் இருக்கக்கூடிய அந்த பந்தம் எப்படியிருக்கும்.
அந்த காமேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் இருக்கக்கூடிய பந்தம்தான் பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இருக்கக்கூடிய பந்தம். சரி… இங்கு காமேஸ பத்த மாங்கல்ய என்று சொல்வதிலிருந்து இங்கிருக்கும் தம்பதியை குறித்து நாம் பேசவில்லை. நாம் பேசுவது ஆதி தம்பதிகளான காமேஸ்வர காமேஸ்வரியை குறித்துத்தான் பேசுகின்றோம்.
இந்த ஆதி தம்பதிகள் தோற்றத்திற்கு அப்பாற்பட்டவர்கள்… தோற்றம் மறைவிற்கு அப்பாற்பட்டவர்கள். இவர்களும் உலகத்தில் தோன்றியது போல் ஒரு மணமகனாகவும் மணமகளாகவும் இருந்து, புதிதாக காமேஸ்வரன் அம்பிகையின் கழுத்தில் கட்டினாரா என்றால் ஒரு லீலைக்காக தேவர்கள் வந்து இரண்டு பேருக்கும் திருமணம் செய்து பார்த்தார்கள். இது புராணங்களில் கிடைக்கக் கூடிய செய்தி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட கல்யாணம் நடக்கின்றது. எல்லா கோயில்களிலும் பத்மாவதி நிவாச கல்யாணம் என்று வைணவத்திலும் நடக்கின்றது. இதில் பக்தர்களாக இருக்கக்கூடிய நம்முடைய திருப்திக்காக அம்பாளுக்கும் சுவாமிக்கும் கல்யாணம் பண்ணுகிறோம். அதுமாதிரி தேவர்கள் வந்து அம்பாளுக்கும் சுவாமிக்கும் தங்களுடைய மகிழ்ச்சிக்காக திருமணம் செய்து பார்த்தார்கள். ஆனாலும், கூட அம்பாள் சிதக்னி குண்டத்திலிருந்து வெளிவரும்போதே மாங்கல்யத்தோடுதான் வருகின்றாள்.
இப்போது வாக்தேவதைகள் எதை வர்ணிக்கிறார்கள் எனில் அவள் சுபாவமாகவேதான் மாங்கல்யத்திலிருந்து வெளியே வருகிறார்கள். அப்போது என்ன அர்த்தம் எனில் நாம் அந்த வஸ்துவை வாக்காலோ அல்லது மனதாலோ அடைய முடியாது. நம்மை அந்த வஸ்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னது, ஏதோ இதற்கு முன்னால் இல்லாத ஒன்றை இனிமேல் தேர்ந்தெடுப்பது கிடையாது.
சுபாவமாகவே இருக்கக் கூடியது. காமேஸ பத்த மாங்கல்யம் என்பது something to be attained அதாவது ஏதோ ஒன்றை அடைவது என்பது கிடையாது. That is the nature. ஜீவனுக்கு தன்னுடைய உண்மையான சொரூபம் பரமாத்மா என்பது இயற்கை. அது not to be attained. ஆனால், அந்த சொரூபமே காண்பித்து கொடுத்தால் மட்டுமே அடைய முடியும். காமேஸ்வரரே அந்த மாங்கல்யத்தை கட்டுகின்றார். அவர் கட்டுகிறார் என்பதால் அது புதிதாக கட்டப்படுகின்றதா என்றால் அதுவும் கிடையாது. அது எப்போழுதுமே இருக்கக் கூடிய சுபாவ நிலை. நாம் என்றைக்கு அடைகின்றோமே… அப்போது அடைந்தோம் என்கிற ஆனந்தத்தை அனுபவித்துக் கொள்ளலாம்.
தேவர்கள் எப்படி அவள் நித்திய சுமங்கலியாக இருந்தாலும் கூட கல்யாணம் செய்து வைத்து ஆனந்தம் அடைந்தார்களோ அதுபோல நம்முடைய உண்மையான சொரூபம்தான் எப்போதும் இருக்கு. குருவினுடைய அனுக்கிரகத்தின் மூலமாக எப்போதுமே இருக்கக் கூடிய சுபாவமான சொரூபத்தை தெரிந்துகொண்டோம் என்கிற ஆனந்தம் அது. புதியதாக அங்கு அடைவதற்கு ஒன்றும் கிடையாது. அதை தெரிந்து கொள்ள வைப்பது எது. குருவினுடைய அனுக்கிரகம்.
அரிச்சந்திரனின் கதையில் கடைசியில் வெட்டியானாக இருப்பான். வாழ்வின் இறுதியில் வெட்டியானாக வாழ வேண்டிய ஒரு சூழல் வரும். மனைவி, பிள்ளை எல்லாரையும் பிரிந்து விடுவான். பாம்பு தீண்டி பிள்ளை இறந்து விடுவான். தன் உருவமே தெரியாத அளவுக்கு காசியில் வெட்டியானாக இருப்பான். அப்போது தன் மனைவி சந்திரமதி தன் இறந்துபோன மகனை தூக்கிக் கொண்டு எரிப்பதற்குக்கூட பணம் இல்லை என்று கேட்கும்போது அதோ உன் கழுத்தில் தாலி இருக்கிறதே அதை கழற்றிக் கொடு என்பான்.
அதாவது, யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு தாலி தன் கணவனுக்கு மட்டும்தான் தெரியும் என்பாள் சந்திரமதி. அப்போது நீங்கள் யார் என்கிறபோது என் பெயர் அரிச்சந்திரன் என்று சொல்லி அதற்குப்பிறகு இருவரும் ஒன்று சேருவார்கள். இதில் கவனிக்க வேண்டிய வாழ்வில் எத்தனை சிரமம் வந்தாலும் சத்தியம் என்கிற பிரம்மத்தை விடாது இருந்தான். சத்தியமாக ஒருவன் இருந்தால்தான் அவனுக்கு எதிரே இருப்பவன் என்ன தொலைத்திருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க முடியும்.
அப்படிப்பட்டவனுக்குத்தான் நமக்குள்ளும் யாருக்கும் தெரியாத அடையாளம் காணப்படாது இருக்கும் பிரம்ம வஸ்துவும் தெரியும். காட்ட முடியும். ஏற்கனவே, உன்னிடம் மாங்கல்யமிருக்கிறதே என்றால் அதோ அங்கு பார்… என்று காட்டிக் கொடுக்கின்றான். அதனால்தான் அவனை பிரம்ம ஞானி என்று எல்லா புராணங்களும் புகழ்கின்றன.
எப்படி தந்தைக்கு தாய்க்கும் திருமணமாகி விட்டது ஒரு மகனுக்கோ மகளுக்கோ தெரிந்தாலும் அறுபது வயதிலும், எழுபது வயதிலும் திருமணம் செய்து பார்க்கின்றோமே அப்படித்தான் இங்கு நாமும் இறைவனுக்கு திருமணம் செய்து பார்க்கின்றோம். ஏன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணத்தில் அம்பிகைக்கு மாங்கல்யதாரணம் செய்வதற்கு முன்பே அவள் கழுத்தில் மாங்கல்யம் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பதை பார்க்கலாம்.
அதுபோலவே நமக்கும் அதாவது ஜீவனுக்கும் பிரம்மத்திற்குமிருக்கும் உறவு என்பது எப்போதும் இருப்பது என்பதையே இறைவன் கட்டிய தாலி என்கிற இந்த உவமை காட்டிக் கொடுக்கின்றது. மனமானது அது எங்கே நமக்கெல்லாம் தரிசனம் தரப்போகின்றது என்றெல்லாம் ஏதேனும் ஏமாற்றிக் கொண்டே இருக்கும், அதனால், அப்படிப்பட்ட எந்தக் கவலையும் வேண்டாம் என்கிறது இந்த நாமம். நீயும் நானும் சேர்ந்தே இருக்கிறோம். அதற்கு சாட்சியே இதோ காமேஸ்வரர் கட்டிய தாலி… அதனால் நீயும் நானும் பிரிந்து இல்லை. அப்படியிருப்பது என்பது தோற்ற மயக்கம் என்று வாக் தேவதைகள் காட்டிக் கொடுக்கின்றார்கள்.
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
– என்று ஆண்டாள் அப்படியே மேலேயுள்ள கருத்தோடு ஒப்பு நோக்கப் பாடுகின்றாள்.
இதற்கு உண்டான கோயிலானது திருவீழிமிழலை. இறைவனின் பெயர் கல்யாண சுந்தரேஸ்வரர், அம்பாளின் பெயர் சுந்தரகுசாம்பிகை. எல்லா கோயில்களிலும் எப்போதாவது திருமண வைபவம் நடக்கும். அப்போதுதான் பந்தக்கால் நட்டு வைப்பார்கள். ஆனால், இந்தக் கோயிலில் க்ஷணத்திற்கு க்ஷணம் திருமணம். அதாவது கணத்திற்கு கணம் திருமணம்.
அதனாலேயே எப்போதுமே பந்தக்கால் நட்டு வைத்திருப்பார்கள். அதாவது அம்பாளும் சிவனும் பிரிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்று பொருள். திருவாரூருக்கு அருகேயே இந்தக் கோயில் அமைந்துள்ளது.
இதேபோலத்தான் நமக்கும் இறைவனுக்கும் ஒரு இணைப்பு இருந்து கொண்டே இருக்கின்றது. அந்த இணைப்பு நம் கண்ணுக்கு தெரியவில்லை. அதை குரு காட்டிக் கொடுக்கின்றார். அவ்வளவுதான்.
The post மாங்கல்ய பாக்கியம் அருளும் நாமம் appeared first on Dinakaran.