×

மகாராஷ்டிராவில் நள்ளிரவு வன்முறை: ஒருவர் பலி; 10 பேர் காயம்; 144 தடை

மும்பை: அகோலாவில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், 10 பேர் காயமடைந்தனர், பதற்றத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அகோலா நகரின் ஹர்ஹர்பேத்தில் நேற்றிரவு இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் இருந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு, அங்கு கூடியிருந்த கும்பல் ஒன்று தீ வைத்தது.

வன்முறை சம்பவத்தையடுத்து பழைய நகர காவல் நிலையத்தை நோக்கி ஏராளமானோர் பேரணியாக சென்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகும் அப்பகுதியில் பதற்றம் நீடித்ததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பத்தில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் குகே உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நீமா அரோரா கூறுகையில், ‘வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார். நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மகாராஷ்டிராவில் நள்ளிரவு வன்முறை: ஒருவர் பலி; 10 பேர் காயம்; 144 தடை appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,Akoula ,Dinakaran ,
× RELATED மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில்...