×

மகாராஷ்டிரா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் திடீர் நியமனம் ஏன்? இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்தலை குறிவைத்து பா.ஜ. அதிரடி

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக கடந்த 2023 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த 3 மாநிலத்தையும் சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றாக கவனித்து வந்தார். இதனால், அவருக்கு பதவி உயர்வு போல மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வருபவர்கள் அந்த மாநிலத்துக்கு எப்போதும் தங்களுக்கு வேண்டியவர்களை தான் நியமிப்பது வழக்கம். அதே நேரத்தில் தற்போது அங்கு பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை உடைத்து, சிவசேனா, பாஜவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த கூட்டணியில் இருந்து எதிர்க்கூட்டணிக்கு பலர் தாவுகிறார்கள்.

அதே நேரத்தில் இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவை கைப்பற்றினால் தான், மற்ற மாநிலத்தில் வெற்றியை எளிதாக பெற முடியும். அது மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிராவை கைப்பற்றும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிரடிக்கு பெயர் போன சி.பி.ராதாகிருஷ்ணன், இங்கேயும் வந்து அதிரடி காட்டுவார் என்று தெரிகிறது. அங்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் போன்ற நேர்மையான, திறமையான ஆளுநரை மகாராஷ்டிராவுக்கு நியமித்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1990ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த சி.சுப்ரமணியம் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, தமிழ்நாட்டை சேர்ந்த சிபி.ராதா கிருஷ்ணன் அந்த பதவிக்கு வந்துள்ளார். மும்பையில் அதிகளவு தமிழர்கள் வசித்து வரும் நிலையில் அவர் கவர்னராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஜனாதிபதி, மோடிக்கு நன்றி
தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் மற்றும் புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில், “ஜார்க்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய 3 பெரிய மாநிலங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பெற்றதை பெருமையாக நினைக்கிறேன். அதை என்றென்றும் போற்றுவேன்.

அந்த 3 மாநிலங்களும் எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். 3 பெரிய மாநிலங்களும் சிறப்பாக இருக்க என் வாழ்த்துகள். மகாராஷ்டிரா ஆளுநராக என்னை நியமித்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது டிவிட்டர் பதிவில், “ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு வாழ்த்துகள். மகத்தான, துணிச்சலான ஜார்க்கண்ட்டுக்கு உங்களை வரவேற்கிறோம். மகாராஷ்டிரா ஆளுநராக பதவி ஏற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

The post மகாராஷ்டிரா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் திடீர் நியமனம் ஏன்? இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்தலை குறிவைத்து பா.ஜ. அதிரடி appeared first on Dinakaran.

Tags : CP Radhakrishnan ,Maharashtra ,Governor ,BJP ,Chennai ,Tamil Nadu ,Governor of ,Jharkhand ,Governor of Telangana ,Deputy ,Governor of Puducherry ,CP ,Radhakrishnan ,
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நவ. 2வது...