×

மராட்டிய பேரவை தேர்தல் : கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளராக களம் இறங்கிய மேலும் 16 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

மும்பை : மராட்டிய மாநில பேரவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கிய மேலும் 16 பேரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் உள்ள கட்சிகளில் சிலர் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கிய 12 வேட்பாளர்களை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னித்தலா நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை உடனே வாபஸ் பெறுமாறும் உத்தரவிட்டார். ஆனால் ரமேஷ் சென்னித்தலாவின் எச்சரிப்பிற்கு செவிச் சாய்க்காத மேலும் 16 பேரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலி நடவடிக்கை எடுத்துள்ளார். இதே போல் உத்தவ் தாக்கரே கட்சியிலும் 6 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் உட்கட்சியில் கலகம் விளைவித்து போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் உட்பட மொத்தம் 40 பேரை அந்த கட்சியும் 6 ஆண்டுகளுக்கு நீக்கி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலும் 30 பாஜக போட்டி வேட்பாளர்கள் அல்லது அதிருப்தியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post மராட்டிய பேரவை தேர்தல் : கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளராக களம் இறங்கிய மேலும் 16 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Marathia Council Election ,Korada ,MUMBAI ,MARATHIYA STATE ,COUNCIL ,Marathia ,Marathya Sabha Election ,Dinakaran ,
× RELATED பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் டிச.13,14ம்...