ஸ்ரீரங்கம், திருச்சி
108 வைணவ திருத்தலங்களில், முதன்மையான தலம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்). அதுமட்டுமா.. திருவரங்கத்தை `பூலோக வைகுண்டம்’ என்றே அழைக்கின்றது நம் புராணங்கள். தற்போது, திருவரங்கத்தில் பரமபதவாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் நமக்கெல்லாம் சேவை சாதித்தார். அந்த கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு நாம் பரவசமடைந்தோம் அல்லவா! மீண்டும் அதே நிலையில் பரவசமடைய போகிறோம். திருவரங்கத்திலேயே பல மகான்களின் மூல பிருந்தாவனங்கள் உள்ளன.
திருவரங்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், `ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகாபிருந்தாவனம் அமைந்திருக்கிறது. எங்கு ஏறினாலும், கட்டக் கடைசி நிறுத்தம் திருவரங்கம்தான். அங்கிருந்து பார்த்தாலே, `ராகவேந்திர ஆர்ச்’ உங்களை வரவேற்கும். அதினுள் நடந்து சென்றால், ராகவேந்திர ஸ்வாமி மடத்தை அடைந்துவிடலாம். அமைதியான, எந்த ஒரு சப்தமும் இல்லாமல், `பாரோ.. பாரோ..’ (வாருங்கள்.. வாருங்கள்..) என்று குருராஜர் (ராகவேந்திரர்) நம்மை அழைப்பது போலவே இருக்கும்.
சிறிய மிருத்திகா பிருந்தாவனமாக தோற்றம் அளித்தாலும், அவரை கண்டதும் நாம் எங்கும் நகராது, `இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே… இன்னும் கொஞ்ச நேரம்..’ என்று அவரை பார்த்து பார்த்து மனமுருகி அங்கேயே இருந்துவிடுவோம். அத்தகைய சாந்நித்தியம் அவரிடத்தில் உள்ளது.
ராகவேந்திரரை தரிசிப்பதற்கு முன், அவருக்கு மேலே `ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா – அனுமாரோடு காட்சியளிக்கிறார். முதலில், தெரிந்த ஸ்லோகத்தை சொல்லி அவரை வணங்க வேண்டும். அதன் பின்னர், ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்தின் மீது எப்போதும் இருந்தருளும், `ஸ்ரீலட்சுமி நரசிம்மரை’ வேண்ட வேண்டும். பின்னர்தான், மகான் ராஜாதிராஜ குருசர்வபௌமரை (ராகவேந்திரர்) வணங்கவேண்டும்.
மேலும், நாம் ஏற்கனவே கூறியதை போல், பல மூல பிருந்தாவனங்கள் இருக்கின்றன. ராகவேந்திர ஸ்வாமிகளுக்கு பிறகு, அவர் கையினால் சந்நியாசத்தை ஏற்று குருவாக இருந்த `ஸ்ரீ யோகீந்திர தீர்த்தர்’, அதன் பிறகு அடுத்தடுத்து வந்த குருமார்களான `ஸ்ரீசுமதீந்திர தீர்த்தர்’, `ஸ்ரீஉபேந்திர தீர்த்தர்’, ஸ்ரீமுனீந்திர தீர்த்தர்’ என மிக பெரிய உன்னதமான மகான்கள், பிருந்தாவனத்திற்குள் வாசம் செய்கிறார்கள்.
தினமும் நித்ய பூஜைகள், ஆராதனைகள், வியாழன் தோறும் ரதோற்சவம் என பரிபூரண குருராஜரின் ஆசிகள் நிறைந்த இடம். இங்கு, ஆண்டு தோறும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று, ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிக்கு `மகா அபிஷேகம்’ நடைபெறும். பால், தேன், நெய், வெல்லம், முந்திரி, திராச்சை, பாதாம், ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி போன்ற பல வகை பழங்களினால் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது.
மேலும், பல வண்ண மலர்களினால் அலங்காரமும், மங்கள ஆரத்திகளும் செய்யப்படுகின்றன. இவைகளை எல்லாம் பார்த்தால், நாம் நிச்சயம் பரவசமடைவோம். வருகின்ற புத்தாண்டு அன்றும் (1.1.2024) `மகா அபிஷேகம்’ நடைபெறுகின்றன.
The post மகாபிஷேகம் காணும் ஸ்ரீராகவேந்திரர் appeared first on Dinakaran.