×

லோக்சபா ேதர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமான நிலையில் இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் ஒன்றிய அரசு: கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்னாச்சு?

புதுடெல்லி: லோக்சபா ேதர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமான நிலையில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவில்லை என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. நாடாளுமன்ற லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நலத்திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. வரும் பிப். 1ம் தேதி ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான அறிவிப்புகள் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை அடையவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தனது பட்ஜெட் உரையில், ‘தற்சார்பு இந்தியா’வை நோக்கிய பட்ஜெட் என்று கூறினார். அவற்றில் ‘ஆத்மநிர்பர் தோட்டக்கலை தூய்மையான தாவர திட்டம்’, ‘பார்மா கண்டுபிடிப்பு திட்டம்’, ‘பிரதான் மந்திரி பழங்குடியினர் நலத் திட்டம்’ ஆகியவை கடந்த ஆண்டு நடுப்பகுதிக்குப் பிறகுதான் தொடங்கப்பட்டன. மேலும் இந்த திட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முழு விவரம் ஒன்றிய அரசின் இணையதளத்தில் கூட வௌியிடவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா தனது ஈரநிலங்களில் 30 சதவீதத்தை இழந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்காக கடந்த பட்ஜெட்டில், ‘அம்ரித் தரோஹர் யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அறிவிப்பு இருந்தபோதிலும், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவையில் ஈரநிலங்கள் குறித்த தரவு அரசாங்கத்திடம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். கிராமப்புறங்களில் 2.95 கோடி வீடுகள் கட்டும் நோக்கத்துடன் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது.

கடந்த பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்காக ரூ .48,000 கோடியிலிருந்து ரூ .79,000 கோடியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, அறிவிக்கப்பட்ட வீடுகளில் 35 சதவீத வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிய அரசிடமிருந்து நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டை எதிர்பார்க்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதமாகக் குறைப்பதை ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டிருப்பதால், இந்த முறை பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை அடுத்து இந்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கு ஒன்றிய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுவசதி திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவீதம் அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் என்றும், உணவு, உரம், மின்சார வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு போன்ற துறைகளும் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post லோக்சபா ேதர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமான நிலையில் இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் ஒன்றிய அரசு: கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்னாச்சு? appeared first on Dinakaran.

Tags : Union government ,Lok Sabha election ,NEW DELHI ,Lok Sabha elections ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய...