×

மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே டெல்லி சேவைகள் மசோதா தாக்கல்: மாநில அரசு அதிகாரத்தில் அத்துமீறும் செயல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே டெல்லி சேவைகள் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது மாநில அரசின் அதிகாரத்தில் ஒன்றிய அரசின் அத்துமீறல் என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. தலைநகர் டெல்லியில் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில்ஒன்றிய அரசு அவசர சட்டம் நிறைவேற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட டெல்லி சேவைகள் மசோதாவை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று தாக்கல் செய்தார்.

மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அவையில் பேச மறுக்கப்பட்டதால் ஆம் ஆத்மியின் ஒரே எம்பி ரிங்குவும், காங்கிரசின் டி.என்.பிரதாபனும் காகிதங்களை கிழித்து வீசினர். அப்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘டெல்லிக்கான சட்டங்களை இயற்ற அரசியலமைப்பு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கம் கொண்டுள்ளன’’ என்றார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘மாநில அரசுகளின் அதிகார எல்லையில் ஒன்றிய அரசின் மூர்க்கத்தனமான அத்துமீறலை இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது.

இது டெல்லி மாநில அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒன்றிய அரசு விரும்புகிறது‘‘ என்றார். இந்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் என பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மக்களவை தொடர் அமளி காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அமளிக்கு மத்தியில் பிறப்பு, இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு சங்க விதிகள் மசோதா நிறைவேற்றம்

கூட்டுறவு சங்க செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து வலுப்படுத்த பல மாநில கூட்டுறவு சங்க விதிகள் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜ அரசு தெரிவித்தது. இதற்கான மசோதாவை கூட்டுறவு இணை அமைச்சர் பி.எல்.வர்மா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். விவாதத்திற்கு பின் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

The post மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே டெல்லி சேவைகள் மசோதா தாக்கல்: மாநில அரசு அதிகாரத்தில் அத்துமீறும் செயல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Congress ,state government ,New Delhi ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...