×

ஆயுள், மருத்துவ காப்பீடு மீதான 18சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம்

புதுடெல்லி: ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாக்பூரின் ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில், தொழில்துறையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது மிகுந்த கவலை அளிக்கிறது. தொழிற்சங்கம் எழுப்பிய முக்கிய பிரச்னை ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்பதாகும். ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு மீதான பிரீமியங்கள் இரண்டுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி விரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமமாகும். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை உணர்ந்த ஒருவர் அபாயத்தை கருத்தில் கொண்டு தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கு வரிவிதிக்கப்படக்கூடாது. இதேபோல் மருத்துவ காப்பீடு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி என்பது சமூக ரீதியில் அவசியமான இந்த வணிகப்பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது. மருத்துவ காப்பீடு பிரீமியங்களுக்கான வருமான வரி விலக்கு மற்றும் பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுவதற்கான பரிந்துரையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், ‘‘மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்துக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று மக்களவையில் நான் கோரிக்கையை நான் முன்வைத்தேன். இதனை அமைச்சர் நிதின் கட்கரி ஆமோதித்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post ஆயுள், மருத்துவ காப்பீடு மீதான 18சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nitin Katkari ,Minister ,Nirmala Sitharaman ,New Delhi ,Union Road Transport and ,Highways ,Union Finance Minister ,Life Insurance Club Employees Association of Nagpur ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் கடந்த 2025ல் 166 புலிகள்...