சென்னை: எல்ஐசியின் இன்டெக்ஸ் ப்ளஸ் புதிய திட்டத்தை நிறுவன தலைவர் சித்தார்த் மொஹந்தி தொடங்கி வைத்தார். எல்ஐசி நிறுவனம் இன்டெக்ஸ் ப்ளஸ் என்ற புதிய பங்குச்சந்தை சார்ந்த திட்டத்தை கடந்த 5ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இது, தவணை முறையில் பிரீமியம் செலுத்தும் ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தனி நபர் சேமிப்பு திட்டம் மற்றும் பாலிசி காலம் முழுவதும் ஆயுள் காப்பீடு அளிக்கும் திட்டம்.
நடப்பில் உள்ள ஒவ்வொரு பாலிசியிலும் ஆண்டுதோறும் செலுத்தும் பிரீமிய தொகையின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை உறுதி அளிப்பு தொகையாக குறிப்பிட்ட கால இடைவெளியில் பாலிசி கணக்கில் சேர்க்கப்பட்டு, அந்த தொகைக்கு ஏற்ப கூடுதல் யூனிட்கள் பாலிசி கணக்கில் வரவு வைக்கப்படுவது திட்டத்தின் சிறப்பு அம்சம். இந்த திட்டத்தில் 90 நாட்களாக குழந்தைகள் முதல் 50 வயதானவர்களுக்கு செலுத்தும் பிரீமியத்தின், 7 முதல் 10 மடங்கு வரையிலான அடிப்படை காப்பீட்டு பாதுகாப்பும், 51 வயது முதல் 60 வயதானவர்களுக்கு செலுத்தும் பிரீமியத்தின் 7 மடங்கு அடிப்படை காப்பீட்டு பாதுகாப்பும் கிடைக்கும்.
குறைந்தபட்ச முதிர்வு வயது 18 ஆகவும், அதிகபட்ச முதிர்வு வயது 75 அல்லது 85 ஆகவும் அடிப்படை காப்பீட்டு தொகையை பொறுத்து அமையும். வருடாந்திர பிரீமிய தொகையை பொறுத்து, பாலிசி காலம் குறைந்தபட்சம் 10 அல்லது 15 ஆண்டுகள். அதிகபட்ச பாலிசி காலம் 25 ஆண்டுகள். பிரீமியம் செலுத்தும் காலம் மற்றும் பாலிசி காலம் ஒன்றாகவே இருக்கும்.
அதிகபட்ச பிரீமிய வரையறை ஏதுமில்லை. குறைந்தபட்ச பிரீமியம் ரூ.30,000 (வருடம் ஒருமுறை), ரூ.15000 (அரையாண்டு), ரூ.7500 (காலாண்டு), ரூ.2500 (மாதாந்திரம்). இறப்பு காப்பீட்டு தொகை, பாலிசியில் காப்பீடு தொடங்கும் நாளை பொறுத்தும், இறக்கும் வயதை பொறுத்தும் அமையும். எல்ஐசியின் விபத்துக்கான பிரீமிய விருப்ப தேர்வுகளும் உண்டு. நிபந்தனைகளுக்கு உட்பட்டு காப்பீடு பிரீமியத்திற்கான தொகை திருப்பி அளிக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் விவரங்களை பாலிசியின் விற்பனை கையேடு மற்றும் www/licindia.in என்ற இணைய முகவரியில் பெறலாம்.
The post எல்ஐசியின் இன்டெக்ஸ் ப்ளஸ் புதிய திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.