×

தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள்

சாயல்குடி: கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலையில் சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம் எம்.கரிசல்குளம், தனியங்கூட்டம், ஒச்சதேவன்கோட்டை, காணீக்கூர், பிள்ளையார்குளம், உசிலங்குளம், வாகைக்குளம், திட்டங்குளம் மற்றும் கூரான்கோட்டை, வெள்ளம்பல், வேடக்கரிசல்குளம், மணிவலசை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலை கல்வி, கல்லூரி படிப்பிற்கு கடலாடி,கமுதி உள்ளிட்ட வெளியூர் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிற்கு கடலாடி வந்து செல்லும் நிலை உள்ளது. இப்பகுதிகளில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கிராம செவிலியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற கரிசல்குளம் வில்வநாதர் கோயில், காணீக்கூர் பாதாள காளியம்மன் ஆகிய கோவில்களுக்கு வெள்ளி, செவ்வாய் கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவில் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் செல்லும் வழியில் உள்ள மலட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விரிசல் விட்டு சேதமடைந்து கிடக்கிறது. இதில் லோடு ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் சென்றால், பாலம் இடிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மழை காலத்தில் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலத்தின் மேல்பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வாரக்கணக்கில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே சேதமடைந்த பழைய தரைப் பாலத்தை அகற்றி விட்டு புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி கிராமமக்கள் கூறும்போது, கடலாடியில இருந்து கரிசல்குளம் உள்ளிட்ட கிராம பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள், மாணவர்கள் கடலாடிக்கு ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து, அதிகபாரத்துடன் ஆபத்து பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழகம் கிளை சார்பில் கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளத்திற்கு ஒரு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டது. ஆனால் கடலாடியிலுள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு, கடலாடி முதல் கரிசல்குளம் வரையிலான சாலை, மலட்டாறு தரைப்பாலம் சரியில்லாத காரணத்தால் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் சாயல்குடியில் இருந்து கரிசல்குளம் பகுதிக்கு காலை,மாலை நேரத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டாலும் கூட 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலாடிக்கு, 20 கி.மீ. சுற்றி வரும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய மேம் பாலம் கட்டி, மாணவர்கள், கிராமமக்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, அலுவலக நேரத்திற்கு கடலாடிக்கு பஸ் இயக்க வேண்டும் என கூறினர்.

The post தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,M. ,Kaladadi ,KARISALKULAM ,Maritime Union ,M. Karisalkulam ,Privatization Group ,Ochadevankottai ,Kandeekur ,Pillaiarkulam ,Usilankulam ,Vagaikulam ,Chanthankulam ,Dinakaran ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்பு