×

உழைப்பு என்றால் ஸ்டாலின்தான்: அமைச்சர் உதயநிதி பேட்டி

திருச்சி: உழைப்பு என்றால் ஸ்டாலின்தான் என திருச்சியில், முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 23ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் வருகை பதிவில், உழைப்பு.. உழைப்பு… உழைப்பு என்றால் ஸ்டாலின் என்று கலைஞர் சொல்லியதன் சாட்சியாக தலைவரின் கண்காட்சி அமைந்திருக்கிறது என கருத்தை பதிவிட்டு கையெழுத்திட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்த புகைப்பட கண்காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. தலைவர் ஸ்டாலின் 50 ஆண்டு கால உழைப்பு. உழைப்பு என்றால் ஸ்டாலின் என கலைஞர் கூறியுள்ளார். அந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் எந்த சவாலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

மிசா சட்டத்துக்கும், தற்போதைய பாஜவின் வருமான வரி சோதனைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. பாஜவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. பத்திரிகையாளர்கள் தான் கூட்டணி வைத்துள்ளீர்கள். சட்டமன்றத்தில் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே சில பணிகளும் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அறிவிப்பாக கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post உழைப்பு என்றால் ஸ்டாலின்தான்: அமைச்சர் உதயநிதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Minister ,Udayanidhi ,cm ,trichy ,Trichy District ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை