லக்னோ: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட் செய்தது. அன்மோல்பிரீத், மயாங்க் இருவரும் ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். மயாங்க் 8 ரன் எடுத்து வெளியேற, அடுத்து அன்மோல்பிரீத்துடன் திரிபாதி இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்தனர்.
அன்மோல்பிரீத் 31 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து, க்ருணால் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மார்க்ரம் (0), ஹாரி புரூக் 3 ரன்னில் ஆட்டமிழக்க, ஐதராபாத் 9 ஓவரில் 55 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், திரிபாதி – வாஷிங்டன் ஜோடி கடுமையாகப் போராடி 39 ரன் சேர்த்தது. திரிபாதி 34 ரன் (41 பந்து, 4 பவுண்டரி), வாஷிங்டன் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ரஷித் 4 ரன் எடுத்து அமித் மிஷ்ரா சுழலில் ஹூடா வசம் பிடிபட்டார். உம்ரான் மாலிக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் அப்துல் சமத் அதிரடியாக 2 சிக்சர்களை தூக்கி அசத்த, ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. சமத் 21 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), புவனேஷ்வர் குமார் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் க்ருணால் 3, அமித் 2, யஷ் தாகூர், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 16 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 35 ரன் (31 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். குர்னால் பாண்டியா 34 ரன், பூரண் 11 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ரஷித் 2 விக்கெட், பரூக்கி மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
The post க்ருணால், பிஷ்னோய், அமித் அபார பந்துவீச்சு லக்னோவுக்கு 2வது வெற்றி appeared first on Dinakaran.