×

கோத்தகிரி அருகே மரங்கள் விழுந்து பாதிப்படைந்த பகுதிகளை சுற்றுலா துறை அமைச்சர் நேரில் ஆய்வு

கோத்தகிரி : கோத்தகிரி அருகே மரங்கள் விழுந்து பாதிப்படைந்த பகுதிகளை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்துவங்கி 15-வது நாளாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது.

இதனால் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அவ்வாறு மரங்கள் விழுந்து உள்ள கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா,கோடநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோடநாடு அருகே கெராடாமட்டம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு காலனியில் தமிழ்நாடு அரசு கட்டிக் கொடுத்த வீடுகளின் மேற்கூரை சூறாவளி காற்றில் சேதமடைந்ததை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது உடனடியாக பாதிப்படைந்த மேற்கூரையை சரி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நீலகிரியில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் சாலைகள் உள்ள அபாயகரமான மரங்களை கண்டறிந்து உடனடியாக வெட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அப்போது கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கோடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிகாரி, மாவட்ட அவைத்தலைவர் போஜன், கே.எம்.ராஜூ உடனிருந்தனர்.

The post கோத்தகிரி அருகே மரங்கள் விழுந்து பாதிப்படைந்த பகுதிகளை சுற்றுலா துறை அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : tourism minister ,Kotagiri ,Ramachandran ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி அருகே வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை: வீடியோ வைரல்