×

கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு கொச்சைப்படுத்துகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

தேனி: தேனி அருகே மதுராபுரியில் மாவட்ட திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் கூட இல்லை. பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு மணித்துளியையும் கோல்டன் ஹவராக பயன்படுத்த வேண்டும். வரக்கூடிய தேர்தலில் அதிமுக – பாஜவுடன் சேர்ந்து வருகின்றனர்.

இவர்களை விரட்டி அடிக்க மக்கள் தயாராக இருந்தாலும், இதற்கான முயற்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை சார்பு அணியினர் மேற்கொள்ள வேண்டும். புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதி ஒதுக்க முடியும் எனக்கூறி ஒன்றிய அரசு ரூ.2,500 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட புதிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக கூறிவிட்டார். இந்நேரம் எடப்பாடி முதல்வராக இருந்திருந்தால் ஒரு கையெழுத்தென்ன 10 கையெழுத்து போடுகிறேன் என டெல்லிக்கே சென்று கையெழுத்திட்டிருப்பார். எடப்பாடி முதல்வராக தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்தியில் தான் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒன்றிய பாஜ அரசு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய துடிக்கிறது.

இது நடந்தால், தமிழ்நாட்டில் 7 முதல் 9 எம்பி தொகுதிகள் குறைந்து தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும். திராவிடர்களின் பண்பு, தொன்மை அறிய காரணமாக உள்ள கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் சார்பு அணியினர் விளக்கிட வேண்டும். தேர்தல் என வந்து விட்டால் நாம் அனைவரும் கலைஞர் அணியாக, தலைவர் மு.க.ஸ்டாலின் அணியாக ஒன்றிணைந்து வெற்றியை பெறுவோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், பத்து தோல்வி பழனிசாமியை பல தோல்வி பழனிசாமியாக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

* தேனி கலெக்டர் ஆபீசில் ஆய்வுக் கூட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முதல்வரின் தனிச்செயலரும், கூடுதல் தலைமை செயலருமான பிரதீப் யாதவ், சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலர் ஷஜீவனா, தேனி எம்பி தங்கதமிழ்செல்வன், எம்எல்ஏக்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரவேற்றார். வீரபாண்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் கலந்துரையாடினார். வெளியே வந்தபோது, கிராமத்தினர் தங்கள் பகுதிக்கு வந்து அடிப்படை வசதிகளை பார்வையிட வலியுறுத்தினர். இதனையடுத்து, அங்கு சென்று பார்வையிட்டார். கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

* ‘பாஜவிற்கு ஊழல் பற்றி பேச தகுதி கிடையாது’
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘பாஜவுடன் கூட்டணியே இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் 2, 3 கார்களை மாற்றி சென்று அமித்ஷாவுடன் சந்தித்தது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக மீது இல்லாததும், பொல்லாததுமாக பேசிச் சென்றுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜவிற்கு ஊழலைப்பற்றி பேச தகுதி கிடையாது. பாஜ ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த 11 ஆண்டுகளில் பாஜ பல்வேறு ஊழலை செய்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் பணியிட மோசடி, ரபேல் விமான ஊழல், மருத்துவக் காப்பீட்டில் ஊழல் எனத் தொடங்கி பிரீடம் ஸ்மார்ட் போன் திட்டத்தில் போன் வழங்குவதாக கூறி வசூலித்து மோசடி செய்துள்ளது குறித்து பிரசாரம் செய்ய வேண்டும்’’ என்றார்.

The post கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு கொச்சைப்படுத்துகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,2026 assembly elections ,DMK ,Madurapuri ,Youth Wing Secretary ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,2026 assembly general election… ,BJP government ,Keezhadi ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்