×

கர்நாடக அணைகளில் 86,000 கனஅடி உபரிநீர் திறப்பு ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 77,000 கன அடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 78.55 அடியாக உயர்வு

ஒகேனக்கல்: கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 86 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து 74 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 77.36 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் நேற்று விநாடிக்கு 86 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி, விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியானது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நிலவரப்படி 77 ஆயிரம் கனஅடியானது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து 7வது நாளாக நீடிக்கிறது. மேலும், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை விநாடிக்கு 64,033 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணி நிலவரப்படி 78,238 கனஅடியாக அதிகரித்தது.

நீர்மட்டம், நேற்று இரவு 78.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 40.52 டிஎம்சி ஆக உள்ளது. நீர்மட்டம் 78 அடியாக உயர்ந்துள்ளதால், பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம், மீண்டும் நீரில் மூழ்கியது. மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், காவிரி கரையில் பயிரிடப்பட்டிருந்த கம்பு, சோளம், எள் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நீரில் மூழ்கி வருகின்றன.

The post கர்நாடக அணைகளில் 86,000 கனஅடி உபரிநீர் திறப்பு ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 77,000 கன அடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 78.55 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Okanagan Cauvery ,Mettur ,Okanagan ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!