சேலம்: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் இதன்தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் பரவியுள்ள டெங்கு பாதிப்பை தொற்று நோயாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பெங்களூருவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதுகுறித்து சேலம் சரக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூருக்கு மிகவும் அருகாமையில் கிருஷ்ணகிரி உள்ளது. அங்கிருந்து ஓசூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும் பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் ஏராளமானோர் ெபங்களூர் செல்கின்றனர். மேலும் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் இருந்தும் சேலம் மாவட்டம் மேட்டூருக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக பொது சுகாதாரத்துறையினர் எல்லையோர மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து, பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சேலம் மாவட்டம் கொளத்தூர், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் எல்லையோர பகுதிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்போடு வருபவர்களை கண்டறிந்து லேசான காய்ச்சல் என்றால் மருந்து, மாத்திரைகள் கொடுத்தும், காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’ என்றனர்.
The post கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.