×
Saravana Stores

கர்நாடக அணைகளில் 75,748 கனஅடி திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,102 கனஅடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது

ஒகேனக்கல்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 31,102 கனஅடியாக அதிகரித்த நிலையில், நீர்மட்டம் 51.38 அடியாக உயர்ந்தது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகல் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் 75,748 கனஅடி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 22 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 21,520 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 31,102 கனஅடியானது.

* மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை மற்றும் இடது கரை, ஆய்வு சுரங்க பகுதி, 16 கண் மதகுப்பகுதி, கவர்னர் வியூ பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். கர்நாடக அணைகளில் இருந்து திடீரென கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டால், வெள்ள நீரை தேக்குவது எப்படி, அணை நிரம்பினால் உபரி நீரை பாதுகாப்பாக எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

The post கர்நாடக அணைகளில் 75,748 கனஅடி திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,102 கனஅடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Mettur Dam ,OKANEKAL ,Cauvery ,Kabini ,Krishnaraja Sagar dams ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது