×

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: மும்பை-ராஜஸ்தான் இன்று மோதல்..! மற்றொரு போட்டியில் டெல்லி-கொல்கத்தா பலப்பரீட்சை

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, இதுவரை 5 போட்டிகளில் ஆடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி என்ற நிலையில் உள்ளது.

மும்பை அணி தொடர்ந்து 2 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பின்னர் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், இத்தொடரில் இதுவரை பிரகாசிக்கவில்லை. குறிப்பாக பாண்ட்யா சகோதரர்களின் மோசமான ஆட்டம், அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. நடப்பு சாம்பியன் என்பதோடு, இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் மும்பை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி, கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்த போட்டியில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் மும்பை  அணிக்கு எதிரான இன்றைய போட்டியை அந்த அணியின் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர். அகமதாபாத்தில் இன்று இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்த்து, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி மோதுகிறது.

இத்தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி அணி, அவற்றில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் 2 வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா உள்ளது. இத்தொடரில் நம்பிக்கையுடன் ஆடி வரும் டெல்லி அணி, நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. அதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் துடிப்பில் அந்த அணியின் வீரர்கள் இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றனர். வலுவான ஆல் ரவுண்டர்கள் உள்ள  கொல்கத்தா அணியும், டெல்லியின் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

Tags : IPL D20 Cricket ,Mumbai ,Rajasthan ,Delily ,Kolkata ,Pollerapratsya , IPL T20 cricket: Mumbai-Rajasthan clash today ..! Delhi-Kolkata multi-match in another match
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...