×

9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை

ஜெய்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. ரோகித், இஷான் இணைந்து மும்பை இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 6 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் வசம் பிடிபட்டார். சந்தீப் ஷர்மா வேகத்தில் இஷான் (0), சூரியகுமார் (10) அடுத்தடுத்து வெளியேற, மும்பை 20 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், திலக் வர்மா – முகமது நபி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்தது. நபி 23 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பை 7.3 ஓவரில் 52 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும், திலக் – வதேரா இணைந்து அதிரடியில் இறங்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. திலக் 38 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தனர். வதேரா 49 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் சந்தீப் ஷர்மா வசம் பிடிபட்டார். ஹர்திக் 10 ரன்னில் அவுட்டானார். திலக் 65 ரன் (45 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), கோட்ஸீ 0, டேவிட் 3 ரன் எடுத்து சந்தீப் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. சாவ்லா 1, பும்ரா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் பந்துவீச்சில் சந்தீப் 4 ஓவரில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். போல்ட் 2, ஆவேஷ், சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 104 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். சஞ்சு சாம்சன் 38 ரன், பட்லர் 35 ரன் எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் பியூஷ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினார். ராஜஸ்தான் அணி 8 போட்டியில் 7வது வெற்றியை வசப்படுத்தி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

The post 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Mumbai ,Jaiswal ,Sandeep ,Jaipur ,IPL League ,Mumbai Indians ,Rajasthan Royals ,Sawai Monching Stadium, Mumbai ,Rokit ,Ishaan ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...