மொரதாபாத்: ஆடி மாத பிறப்பின் போது வட மாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு சிவ பக்தர்கள் கன்வார் யாத்திரை செல்வார்கள். புனித நீரை எடுத்து கொண்டு பல்வேறு கோயில்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில், உத்தரகாண்டில் கன்வார் யாத்திரை பாதையில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களின் மத விவரங்கள் சேகரிக்கப்படுவதாக சமாஜ்வாடி முன்னாள் எம்பி எஸ்.டி.ஹசன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,‘‘உத்தரகாண்டில் ஓட்டல் உரிமையாளர்கள், ஊழியர்களின் மத விவரங்களை சில இந்து அமைப்புகள் சேகரிக்கின்றன.
இதில் ஒருவரின் மத அடையாளத்தை காட்டுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதற்காக ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். இது பஹல்காமில் தீவிரவாதிகள் செய்ததில் இருந்து வேறுபட்டது அல்ல. இதுவும் ஒருவிதமான தீவிரவாதம் தான். உத்தரகாண்ட் அரசு இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது’’ என்றார். இதற்கிடையே, உபியில் உள்ள முசாபர்நகரில் சில ஓட்டல் உரிமையாளர்களின் மத விவரங்களை அனுமதியில்லாமல் சிலர் சேகரித்துள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
The post கன்வார் யாத்திரை பாதை; ஓட்டல் உரிமையாளர்களின் மத விவரங்கள் சேகரிப்பு: சமாஜ்வாடி கண்டனம் appeared first on Dinakaran.
