×
Saravana Stores

கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!

கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம். கோபியரோடு ராசக் கிரீடை புரிந்து ஆடி பாடியதை படித்தும் கேட்டும் இருக்கிறோம். செந்தமிழ், மாயக் கண்ணன் ஆடிய பல வகையான நடனங்களை சொல்கிறது.

அவற்றையும் அனுபவிப்போமா?

அல்லியம்

தனுர் யாகம் செய்வதாகவும், அதற்கு கண்ணனும் பலராமனும் வருகை தர வேண்டும் என்றும், உத்தவர் மூலம் நந்தகோபருக்கு தூது அனுப்பினான் கம்சன். உண்மையில் அவனது நோக்கமே வேறு. பல வகையில் கண்ணனை கொல்ல முயன்று கம்சன் தோல்வியை அடைந்தான். ஆகவே கண்ணனை நேரே, தனது நகரமான மதுராவிற்கு அழைத்து வந்து, தன்னிடத்தில் தனது சகாக்களின் உதவியோடு கண்ணனை கொன்று விடலாம் என்று கனவுக்கோட்டை கட்டினான் கம்சன். ஆனால் இதற்கெல்லாம் கண்ணன் சிக்குவானா என்ன?.

உத்தவரின் அழைப்பை ஏற்று, வட மதுரையில் நுழைந்தான் கண்ணன். தனுர் யாகம் நடக்கும் யாகசாலைக்குள் கம்பீரமாக நுழைய எத்தனித்தான். அவனை தடுத்தது குவலயாபீடம் என்ற யானை. யாக சாலையில் நுழையும் கண்ணனை கொல்லும் பொருட்டு அந்த யானையை யாக சாலையின் நுழைவாயிலில் தயாராக வைத்திருந்தான் கம்சன். கம்சன் ஏவிய குவலையா பீடம் என்ற யானையின் தந்தத்தை உடைத்து, அதை சம்ஹாரம் செய்தான் கண்ணன். இந்த வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஆடும் நடனம் தான் அல்லியம் என்ற நடனம். தமிழர்களின் பழம் பெரும் நூலான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு ஆடலுள் ஒரு ஆடலாக இளங்கோவடிகள் இதை வர்ணிக்கிறார்.

‘‘கஞ்சன் வஞ்சம் கடத் தற்காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதி’’
(சிலம்பு :கடலாடு காதை 46 – 47)

‘‘அஞ்சன வண்ணன் ஆடிய ஆடல் பத்துள் கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தக்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்து’’ என்பது அடியார்க்கு நல்லாரின் உரை. ஒரு கொடும் காட்டு விலங்கை கொல்லும் போது, அதனை எந்த முறையில் கொல்வார்களோ அதற்கேற்ற தாளகதியும், நடன அசைவும் கொண்ட நடனம் இது. இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புகள் உண்டு.

குடக்கூத்து

வாணாசுரன் என்ற அசுரன் பெரும் சிவபக்தன். ஆயிரம் கைகளைக் கொண்டவன். அவனுக்கு உஷை என்று ஒரு செல்லமகள் இருந்தாள். அவளுடைய அந்தரங்கத் தோழியின் பெயர் சித்திரலேகா என்பதாகும். இவள் ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவள். ஒரு முறை கனவில் ஒரு தெய்வீக ஆண்மகனை கண்டு அவனது அழகில் தன்னை மறந்து இருந்தாள் உஷை. இதை அறிந்த சித்திரலேகா, உஷை கனவில் கண்ட ஆண்மகனின் வடிவை ஓவியமாக தனது சித்த சக்தி கொண்டு வரைந்தாள்.

ஓவியத்தில் இருக்கும் உருவம், துவாரகா அதிபதியும், தேவகி வாசுதேவனின் செல்வமுமான, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பெயரனும், பிரத்யும்னன் என்ற கிருஷ்ண பரமாத்மாவின் மகனின், மகனுமான அநிருத்தன் என்று இருவருக்கும் தெரியவருகிறது. உடனேயே தனது தோழியின் காதல் பசி தீர்க்க சித்திரலேகா எண்ணினாள். சித்திரலேகா, தனது யோக சக்தியால் உடனேயே துவாரகா மாநகரத்தில், அரண் மனையில் இனிதே உறங்கிக் கொண்டு இருந்த அநிருத்தனை இரவோடு இரவாக, கடத்திக் கொண்டு, தங்களது நகரமான சோனிதபுரத்திற்கு வருகிறாள் சித்திரலேகா. அதன் பின் என்ன? காதல் உள்ளங்கள் சேர்ந்துவிட்டது அல்லவா? அநிருத்தனும் உஷாவும் இன்பமாக இருந்தார்கள். இந்த சங்கதி வாணாசுரனுக்கு தெரியவந்தது. கோபத்தில் கொதித்து எழுந்த அவன், அநிருத்தனை சிறையில் இட்டான்.

இதற்கிடையில், தனது பேரனை தேடிக்கொண்டு இருந்த கண்ணனுக்கு, அவன் வாணனின் சிறையில் இருப்பது தெரியவருகிறது. விஷயத்தை தெரிவித்தது வேறு யாருமில்லை சாட்சாத் நாரதர் தான். உடனேயே தனது பெரும் படையை திரட்டிக்கொண்டு வாணாசுரன் மீது போர் தொடுத்துச் சென்று, அவனை வென்றார். இந்த வரலாற்றை குறிக்கும் நடனம்தான் குட கூத்து.
இந்தக் கூத்தை மாதவி ஆடியதாக இளங்கோவடிகள் சொல்கிறார். இதை ஆடும் போது, பஞ்சலோகத்தாலோ அல்லது மண்ணாலோ ஆன குடத்தை, தலையிலோ அல்லது இடையிலோ வைத்து மாதவி ஆடினாள் என்பது தமிழறிந்த பெரியோர்கள் கருத்து. இதற்கு ஐந்து உறுப்புகள் உண்டு.

வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடம்
(சிலம்பு: கடாலாடு காதை: 54:55)

‘‘காமன் மகன் அநிருத்தனை தன் மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய சோவென்னும் நகர வீதியில் சென்று, நிலங்கடந்த நீனிற வண்ணன் குடம் கொண்டாடிய கூத்து’’ என்பது அடியார்க்கு நல்லார் உரை.

மல்ல கூத்து

வாணனோடு கண்ணன் மல்யுத்தம் செய்ததை சித்தரிக்கும் திருநடனம் இது. இதை மாதவி ஆடியதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பின்வருமாறு சொல்கிறார்.‘‘அவுணற் கடந்த மல்லினாடல்’’ (சிலம்பு)‘‘வாணனாகிய அவுணனை வேறற்கு மல்லனாய் சேர்ந்தாரிற் சென்று அறைகூவி உடல் கரித்தெழுந்து அவனை சேர்ந்த அளவிலே சடங்காகப் பிடித்து உயிர் போக நெரித்துத் தொலைத்த மல்லாடல்’’ என்பது மேலே நாம் கண்ட வரிக்கு அடியார்க்கு நல்லார் செய்த உரை.இந்த ஆடலுக்கு ஐந்து உறுப்புகள் உண்டு.

ஆய்ச்சியர் குரவை

ஆய்ச்சியர் குரவை என்பது, கண்ணன் கோபிகைகளோடு ஆடிய இராசக் கிரீடையை உணர்த்துவது. இதை முல்லை நில மகளிர்கள் திருமாலைப் போற்றி ஆடுவார்கள். தரையில் வட்டம் வரைந்து அதனை பன்னிரண்டு அறைகளாக பங்கிட்டு குரவை ஆடும் மகளிரை அவ்வறைகளில் நிறுத்தி, அவர்களுக்கு முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று எழுவருக்கும் ஏழு பெயரிட்டு இசைபாடி ஆடுவதே ஆச்சியர் குரவை. மற்ற மூன்று ஆய்ச்சி மாரில் ஒருவர் கிருஷ்ணனாகவும், ஒருத்தி பலராமனாகவும், மற்றோருத்தி நப்பின்னையாகவும் தங்களை பாவித்துக்கொண்டு ஆடுவார்கள்.

நப்பின்னையாக நடிக்கும் பெண் ஆட்டத்தின் முதலில், கண்ணன் கழுத்தில் மலர்மாலை அணிவிப்பாள். அதனை தொடர்ந்து அனை வரும் நப்பின்னையை திருமகளை ஒத்த அழகு உடையவள் என்று புகழ்வார்கள். அதனைத் தொடர்ந்து ஆடல் தொடங்கும்.சிலப்பதிகாரத்தில் அனைத்தையும் இழந்த கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளின் துணையோடு மதுரை வருகிறார்கள்.

அங்கே கண்ணகியை ஆய்ச்சியர்கள் கட்டுப்பாட்டில் விட்டு, கோவலன் அவளது ஒற்றைக் கால் சிலம்பை விற்க கடை வீதி செல்கிறான். அப்போது ஆய்ச்சியர்களுக்கு கெட்ட சகுணங்கள் தோன்றுகின்றன. ஆகவே தங்களை காக்கும்படி தங்கள் குலதெய்வமான கண்ணனை போற்றி ஆய்ச்சியர்கள் குரவை ஆடுவதாக இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத்தில் சொல்கிறார். சிலப் பதிகாரத்தில் இந்தப்பகுதி ஆய்ச்சியர் குரவை என்றே அழைக்கப்படுகிறது.

ஜி.மகேஷ்

 

The post கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்! appeared first on Dinakaran.

Tags : Kannithamil ,Kannan ,Kannan Gujal ,Gopi ,Senthamil ,Mayak Kannan ,
× RELATED லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர்