×

ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட்டின் சரைகேலா அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், அவ்வழியே வந்த ஹவுரா பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் பக்கவாட்டுப் பகுதியில் மோதியதால் 2 பயணிகள் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 3.45 மணிக்கு மும்பை-ஹவுரா ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு பாரபாம்புவில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சக்ரதர்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணி நடைபெற்று வருவதாக அக்னி ரயில்வே உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 80% பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளோரை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில் ஜார்க்கண்டில் தடம் புரண்டு 2 பேர் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நான் சீரியசாக கேட்கிறேன்.. இதுதான் ஆட்சியா? ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்தால் மரணங்கள், படுகாயங்கள் நடக்கின்றன. எவ்வளவு காலம் இதை நாம் பொறுத்துக்கொள்ள போகிறோம். ஒன்றிய அரசின் அலட்சியத்திற்கு ஒரு முடிவே இல்லையா?” என மம்தா காட்டமாக தெரிவித்வத்துள்ளார்.

The post ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Howrah-Mumbai express ,Jharkhand ,Saraikela ,Howrah ,Mumbai ,
× RELATED போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்