×
Saravana Stores

இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் லெபனான் தலைநகர் மீது வான்வழி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்ப்பு தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தவும் திட்டம்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா போராளிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறி உள்ளது. அதே சமயம், தெற்கு லெபனான் எல்லையில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த மேலும் பல கிராம மக்களை வீட்டை விட்டு வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
காசாவில் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தற்போது மற்றொரு அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து தீவிரமடைந்துள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, அவருடன் இருந்த ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான சண்டையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. வழக்கத்திற்கு மாறாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டு வீசின. இதில் ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையக கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இந்த கட்டிடம், ஐநா தலைமையகம், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம் ஆகியவை அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய 7 பேர் கொல்லப்பட்டனர். நேற்று மட்டும் ஹிஸ்புல்லாவின் 200 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதில் 60 ஹிஸ்புல்லா படையினர் பலியானதாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி தெற்கு லெபனான் எல்லையில் சிறிய பகுதியில் தரை வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 50 கிராமமக்களை காலி செய்ய உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம், தற்போது தெற்கு லெபனானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நபாதேஹ்வில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இந்த நகரம் ஐநா உடன்படிக்கையின்படி வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டின் வடக்கு பகுதியில் அமைந்தது. கடந்த 2006 போருக்கு பிறகு இரு நாட்டுக்கும் இடைப்பட்ட இப்பகுதியில் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் படைகள் இருக்கக் கூடாது என ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்து.

தற்போது இந்த தீர்மானத்தை மீறும் வகையில் தெற்கு லெபனானின் வடக்கு பகுதி மக்களை காலி செய்ய இஸ்ரேல் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது. எனவே இதுவரை எல்லை அருகே மட்டுமே நடந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா தரைவழி மோதல் தெற்கு லெபனானின் உட்பகுதிக்கு விரிவடையக் கூடும். இதற்கிடையே, தரைவழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவத்தினர் தங்களின் குண்டுகளுக்கு இறையாகி இருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் ஹிஸ்புல்லா கூறி உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் எதையும் உறுதிபடுத்தவில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைநகர் பெய்ரூட்டிலும், தரைவழியாகவும் இஸ்ரேல் ராணுவம் சண்டையை தீவிரமாக்கி இருப்பதால் லெபனான் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 20 நாளில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1276 ஆக அதிகரித்துள்ளது.

* பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் இஸ்ரேல்?
பெய்ரூட்டின் மத்திய பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் மீது இஸ்ரேல் போர் விமானம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாஸ்பரஸ் நெடி வீசியதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற பாஸ்பரஸ் குண்டுகளை ஏற்கனவே காசாவில் இஸ்ரேல் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. பாஸ்பரஸ் குண்டுகள் மிகவும் ஆபத்தானவை. இவை வெடித்த பிறகு 800 டிகிரி தீப்பிழம்பை ஏற்படுத்தும். இதில் அத்தனையும் எரிந்து சாம்பலாகி அடுத்து புல் பூண்டு கூட முளைக்காது.

* ஹமாஸ் முக்கிய தலைவர் கொலை
காசாவில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் ரவ்ஹி முஸ்தபா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இவருடன் சமே சிராஜ், சமே உடே ஆகிய 2 தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகவல் குறித்து ஹமாஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை சுரங்கத்திற்குள் அடைத்து வைத்தவர் முஸ்தபா. இவர் தலைமையில் பிணைக் கைதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

* ஈரான் மீது இன்று தாக்குதல் நடக்குமா?
ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் எப்போது அந்நாட்டிற்கு எதிராக எதிர்தாக்குதல் நடத்துமோ என்ற பரபரப்பு நீடித்து வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்ட போது, ‘‘முதலில் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். இந்த போரை விரிவுபடுத்த வேண்டாம் என்றுதான் நாங்கள் இஸ்ரேலுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே இன்றைக்கு எந்த தாக்குதலும் நடக்காது’’ என்றார்.

* 40 மீட்பு பணியினர் பலி
லெபனான் சுகாதார அமைச்சர் பைராஸ் அபைத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 3 நாளில் இஸ்ரேலின் தாக்குதலில் 40 மீட்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த 4 மருத்துவ பணியாளர்கள் இன்று (நேற்று) பலியாகி உள்ளனர். மேலும் லெபனான் ராணுவ வீரர்கள் 2 பேரும் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகி உள்ளனர்’’ என்றார்.

The post இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் லெபனான் தலைநகர் மீது வான்வழி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்ப்பு தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தவும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Lebanon ,Israel ,Hezbollah ,Beirut ,Hizbullah ,southern Lebanon ,Lebanon Capital ,Dinakaran ,
× RELATED லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல்