வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடிகள் என அறியப்படும் மாவோரி பழங்குடியினருக்கும் இடையே 1840-ம் ஆண்டு வைதாங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மாவோரி பழங்குடியின மக்களுக்கு சில சிறப்பு சலுகை மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த சலுகைகளை பறிக்கும் வகையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு டி பாடி மாவோரி கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோரி கட்சியினர் மற்றும் மாவோரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற 9 நாள் பேரணி வெலிங்டனில் நேற்று முடிவடைந்தது. போராட்டத்தின் இறுதிக்கட்டமாக பல்வேறு நகரங்களில் வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைநகரில் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.
சிலர் மாவோரி பழங்குடியினரின் பாரம்பரிய உடை அணிந்து, மாவோரி கொடிகளை ஏந்தி வந்தனர். பேரணியின் முடிவில், நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்ட மசேதா மாவோரி உரிமைகளை பறிப்பதாக குற்றம்சாட்டி முழக்கம் எழுப்பினர். இப்போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
The post பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதா?: நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! appeared first on Dinakaran.