×

இஷான் கிஷான் சர்ச்சை அவுட்: சேவாக் சாடல்

டெல்லி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த 41வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்சஸ் அணியின் வீரர் இஷான் கிஷன் ஆவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இஷான் கிஷான் 1 ரன் எடுத்திருந்தபோது, தீபக் சாஹர் வீசிய பந்து லெக்சைடில் அவரது பேட்டை உரசுவதுபோல் சென்று விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனிடம் பிடிபட்டது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை. அந்த பந்தை வைட் என்று நடுவர் காட்டினார். ஆனால் இஷான் கிஷான் அவுட் என்று நினைத்து நடையை கட்டினார். உடனே நடுவரும் அவுட் என்று கையை உயர்த்தினார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், ‘பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார். இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை, நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது’ என்று கூறினார்.

The post இஷான் கிஷான் சர்ச்சை அவுட்: சேவாக் சாடல் appeared first on Dinakaran.

Tags : Ishan Kishan ,Sehwag Satal ,Delhi ,Sunrisers ,Hyderabad ,Mumbai Indians ,league ,IPL ,Mumbai ,Dinakaran ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது